

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 13 மற்றம் 14-ம் தேதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், 15-ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 13 கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்குக் காரணமாக இருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த கடந்த மாதம் 30-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இது குறித்து தமிழக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் கட்சித் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இண்டியா கூட்டணியில் ஏற்கனவே உள்ள சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. புதிய வரவாக, தவெகவும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், விசிக சார்பில் தொல். திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் ஷண்முகம், சிபிஐ சார்பில் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தீர்மானங்கள்:
1. இண்டியா கூட்டணியில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினை இண்டியா கூட்டணி கட்சிகள் மனப்பூர்வமாக வரவேற்கின்றன. இந்த நல்ல அரசியல் முடிவை எடுத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழக முதல்வர் விஜய்யை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது.
2. சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற வகையிலும், தகுதியான 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கின்ற வகையிலும் செயல்படுகின்ற இந்திய தேர்தல் ஆணையத்தையும், அதனுடைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும், அவரை ஒரு கருவியாக பயன்படுத்தி இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலத்தை அரங்கேற்றி வரும் மோடி - அமித் ஷா கூட்டணியையும் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3. இந்த ஜனநாயகப் படுகொலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கின்ற வகையில் தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இண்டியா கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் ‘ஜனநாயகத்தைக் காப்போம்” (Save Democracy) என்ற ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.
4. இறுதியாக சென்னை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அதில் இண்டியா கூட்டணியினுடைய தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
5. இந்திய ஜனநாயகத்தை பேரழிவிலிருந்து பாதுகாக்கும் இந்த போராட்ட நடவடிக்கைகளுக்கு சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பேராதரவை தர வேண்டும் என்று இக்கூட்டம் அனைவரையும் வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கிறது என்று தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.