

ஈபிள் பவரைப் பார்வையிட்ட பிஏபிஎஸ் அமைப்பினர்
புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் ஈபிள் கோபுரத்திற்குச் சென்ற போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா(பிஏபிஎஸ்) அமைப்பின் குழு, அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்களை விலக்கி வைக்கக் கோரவில்லை என்று அந்த அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரிலுள்ள ஈபிள் டவர் உள்ளது. பிஏபிஎஸ் அமைப்பைச் சேர்ந்த துறவிகள் உள்ளிட்ட 100 பேர் கொண்ட குழு, கடந்த செப்டம்பர் 5 அன்று ஈபிள் டவருக்கு வருகை தந்தனர். அப்போது, ஈபிள் டவரின் பெண் ஊழியர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈபிள் டவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, பாரிஸின் அடையாளச் சின்னமான ஈபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிஏபிஎஸ் அமைப்பின் பாரிஸ் பிரிவு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தற்போது விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையில், “பிஏபிஎஸ் அமைப்பைச் சேர்ந்த குழுவினர் ஈபிள் டவருக்குச் சென்றபோது, அங்கு பணிபுரியும் பெண்களை அவர்கள் செல்லும் பாதையிலிருந்து விலக்கி வைக்கக் கோரவில்லை. இந்தச் சர்ச்சையால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குறித்து பிஏபிஎஸ் கவலை கொள்கிறது.
அந்தப் பயணம் தொடர்பான சூழலைத் தெளிவுபடுத்தவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விசாரணையின் இந்த முடிவுகள் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சையால் ஈபிள் டவரின் தலைமை அதிகாரி பணியிலிருந்து விலக முடிவு செய்தார். ஈபிள் டவரை நிர்வகிக்கும் நிறுவனமான 'Société d’Exploitation de la Tour Eiffel'-ன் தலைமை நிர்வாக அதிகாரி பேட்ரிக் பிராங்கோ ருய்வோ, இந்த ஆண்டின் இறுதியில் பதவியிலிருந்து விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈபில் டவர் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர், பாலின அடிப்படையில் பெண் ஊழியர்கள் ஓரங்கட்டப்பட்டனர் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டனர். பிஏபிஎஸ் வழங்கிய அறிவுறுத்தல்களே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அல்லது சிரமத்திற்குள்ளான அனைவரிடமும் பாரிஸில் உள்ள பிஏபிஎஸ் அமைப்பு ஏற்கனவே மன்னிப்பு கோரியிருந்தது.
பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள பிஏபிஎஸ் இந்து கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடத்தப்பட்டிருந்தது. இதையொட்டி, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈபிள் டவரைப் பார்வையிடச் சென்றுள்ளனர்.
பிஏபிஎஸ் இணையதள தகவலின்படி, இந்த அமைப்பு வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, இந்தியா மற்றும் ஆசிய - பசிபிக் பிராந்தியங்களில் 1,300-க்கும் மேற்பட்ட கோயில்களைக் கட்டி நிர்வாகிக்கிறது.