

சென்னை: அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்குமாறு திமுக கேட்டது. ஆனால், அதற்கு நாங்கள் மறுத்துவிட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அவர்களை கலந்தாலோசிக்காமலேயே வெளியேறியது.
ஆனால், எங்களை பொறுத்தவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்தோம். எங்களது மாநில தலைவர்கள், அவரை சந்தித்து பேசியபோது, திமுக ஆதரவுடன் ஒரு அரசை அமைப்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.
அதாவது, அதிமுக தலைமையிலான அரசை திமுக வெளியில் இருந்து ஆதரிக்க இருப்பதாக தெரிவித்தனர். மற்ற விவரங்கள் எதையும் எங்களிடம் கூறவில்லை. ஆனால், திமுக என்ன செய்ய விரும்புகிறது என்பதை எங்களிடம் நியாயமான முறையில் கலந்தாலோசித்தனர்.
அதை நாங்களும் ஆதரிக்க வேண்டும், அவர்களது அணுகுமுறையை நாங்களும் பின்பற்ற வேண்டும் என்று திமுக விரும்பியது. நாங்கள் திமுகவை எதிர்க்கப் போவதில்லை.
ஆனால், பாஜக கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்த அதிமுகவை ஆதரிக்கும் அரசியல் முடிவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து விட்டது.
திமுகவும் தோல்வியடைந்துவிட்டது. நாங்கள் திமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்தோம். அதனால் நாங்களும் தோற்றுவிட்டோம். அந்தவகையில், நாங்கள் ஆட்சி அமைக்க முடியாது.
எனவே, தமிழக சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உருவாகிய தவெகவுக்கு எங்கள் ஆதரவை வழங்கியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.