

சென்னை: விஜய்க்கான வாய்ப்பு கம்யூனிஸ்ட்களால் தடைபட்டுவிடக்கூடாது, அதனால், தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும், அதேநேரம் திமுகவுடனான உறவு தொடரும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியிருந்தது.
இதில் காங்கிரஸ் கட்சி 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவு அளித்துவிட்ட நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநில செயற்குழு, மாநிலக் குழு கூட்டத்தை சென்னையில் நேற்று கூட்டியிருந்தன.
அதன்முடிவில், இரு கட்சிகளும் தலா 2 எம்எல்ஏக்களுடன் தவெகவுக்கு தங்களது ஆதரவை வழங்குவதாக தெரிவித்து, தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் ஆதரவு கடிதங் களை வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இத்தகைய சூழலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் அமைய வேண்டியது அவசியம். அதுவும் வரும் 10-ம் தேதிக்குள் (நாளை) அமைக்க வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்ற நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஆளுநர் ஆட்சி என்பது பாஜக கொல்லைப்புற வழியாக ஆட்சி நடத்துவதாக தான் அமையும். தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்துவது என்கிற நோக்கத்துடன், பாஜக இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.
இதை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தவெக ஆட்சி அமைக்க இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது என்று தீர்மானித்துள்ளோம். அதேநேரம் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்.
இன்னொரு தேர்தலை தவிர்ப்பதற்காகவும், ஆளுநர் ஆட்சியை தடுப்பதற்காகவும் வேறு எந்த அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது என்பதால் தவெகவுக்கு தற்போது ஆதரவு அளிக்கிறோம்.
அதேநேரம் எதிர்காலத்தில் மாநில உரிமைகளை பாதுகாப்பது, மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவது என மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளில், ஒருமித்த கருத்துடைய பிரச்சினைகளில் திமுகவுடனான எங்களது உறவு தொடரும்.
அதேபோல் நாங்கள் எங்களது நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். இதில் திமுகவின் ஒப்புதல் எங்களுக்கு எதற்கு? அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: இந்திய ஜனநாயகத்தில் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பு. மக்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாய்ப்பளித்து இருக்கிறார்கள். அந்த வாய்ப்பை முழு நிறைவு செய்வதற்காக எங்களிடம் ஆதரவு கோரினார்கள்.
இதையடுத்து, முறைப்படி கட்சி கமிட்டியில் விவாதித்து, விஜய்க்கு ஆதரவு தர முடிவு எடுத்திருக்கிறோம். தமிழக மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். நாங்கள் வழிமொழிந்திருக்கிறோம்.
விஜய்க்கான வாய்ப்பு கம்யூனிஸ்ட்களால் தடைபட்டுவிடக்கூடாது. இது கூட்டணி அல்ல, ஆதரவு. இனிவரும் காலங்களில் விஜய் தமிழகர்களின் உரிமைகளுக்காக, ஜனநாயகத்துக்காக, மதச்சார்பின்மைக்காக உரத்த குரல் எழுப்ப வேண்டும்.
அவருக்கு இடதுசாரிகள் உறுதுணையாக இருப்போம். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எடுக்கிற அரசியல் நிலைப்பாட்டை, தான் அப்படியே ஆதரிப்பதாக விசிக தலைவர் திருமாவளவனும் தெரிவித்துள்ளார். இதைப்பற்றி அவர் தெரிவிப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.