

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இடதுசாரி கட்சிகள், கரப்பான் பூச்சி அமைப்பினர் நடந்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கெடுப்பதை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இடையே ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தலைமைச் செயலர் எம்.சாய்குமார்தான் இதை வலியுறுத்தியுள்ளார். அதேபோல் குஜிலியம்பாறை வட்டாட்சியர் பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
ஆனால், பயிற்சி முடிந்து விட்டதால் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் பணியில் சேர்வதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் விடுவிக்கப்பட்டதாக ஆட்சியரின் குறிப்பு கூறுகிறது.
அடுத்தடுத்து இடதுசாரிகள் குறிவைக்கப்படுவது தற்செயலானது அல்ல. தலைமைச் செயலர், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் இன்று (ஆக.22) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.