

செங்கல்பட்டு: ஆக்ரா ரயிலில் சூட்கேசில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கூடுவாஞ்சேரி அருகே கொலை நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 5-ம் தேதி ஆக்ராவுக்கு சென்றபோது, ரயிலில் இருந்த சிவப்பு நிற சூட்கேஸில் சிதைந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச ரயில்வே மற்றும் காவல் துறை, தமிழ்நாடு ரயில்வே காவல் துறையின் உதவியை நாடியது. இதன்பேரில் நடைபெற்ற விசாரணையில், ரயிலில் ஏறுவதற்கு முன்பு, ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சிவப்பு நிற சூட்கேசுடன் சென்னை சென்ட்ரலுக்குள் நுழைவதை சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்தனர்.
அவர்கள் சூட்கேஸை ஒரு பெட்டிக்குள் வைத்துவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே அதிலிருந்து இறங்கி, புறநகர் ரயிலில் ஏறி கூடுவாஞ்சேரியில் இறங்கியது தெரிந்தது.
கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வீட்டிலிருந்து அந்த தம்பதி சூட்கேசுடன் சென்றது தெரிந்தது.
வீட்டின் பூட்டை உடைத்து போலீஸார் உள்ளே சென்றனர். அங்கு, யாரையோ கொலை செய்து உடலை எலும்பு தனியாக, சதை தனியாக வெட்டி எடுத்த அடையாளம் இருந்தது. மேலும் பெரிய பாத்திரத்தில் அசைவ உணவு சமைத்திருப்பதை கண்டறிந்தனர்.
சமைத்த உணவில் மனித உறுப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், அந்த பாத்திரத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக போலீஸார் அனுப்பியுள்ளனர். சம்பவம் நடந்த வீட்டில் ஒடிசாவைச் சேர்ந்த மணிக் உதின் லஷ்கர்(40), மஞ்சி (35), ஹையத்துன் நிஷா (38) வசித்தது விசாரணையில் தெரிந்தது.
கடந்த ஜூன் மாதம் வீட்டை வாடகைக்கு எடுத்து தம்பதியர், கொலை செய்யப்பட்ட பெண் ஆகிய மூவரும் ஒன்றாக தங்கியுள்ளனர். இறந்த பெண் ஹையத்துன் நிஷா என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
அவர் தாம்பரம் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருப்பதும் தெரிந்தது. இவருக்கு திருமணமாகி 19 வயதில் மகன் இருப்பதையும் அறிந்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் போலீஸார் தலையைத் தேடி வருகின்றனர். ஒடிசாவைச் சேர்ந்த தம்பதிகள் மணிக் உதின் லஷ்கர், மஞ்சியை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.