

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மலர்ச் சந்தையில் குவிந்த மக்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படும் நிலையில், பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று முக்கிய கடைவீதிகள், சந்தைகளில் விற்பனை களை கட்டியது.
சென்னை கோயம்பேடு, தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மக்கள் பெருமளவில் திரண்டதால் அப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டன.
மக்கள் வருகை அதிகரித்த அதேவேளையில், வரத்து குறைவு மற்றும் திடீர் தேவை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணை தொட்டது.
கோயம்பேடு மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.500 முதல் ரூ.1,200 வரை எகிறியது. ஜாதிமல்லி ரூ.750-க்கும், முல்லை ரூ.300 முதல் ரூ.800 வரையிலும், சாமந்தி ரூ.200 முதல் ரூ.250 வரையிலும், சம்பங்கி ரூ.210-க்கும், ரோஜா ரூ.140-க்கும் விற்பனையானது.
பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால், சாதாரண மலர் மாலைகளின் விலை ரூ.200-ல் இருந்து ரூ.400 வரை இருமடங்காக உயர்ந்தது. இதேபோல் பழங்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலையும் சூடுபிடித்தது.
ஆப்பிள் கிலோ ரூ.165, சாத்துக்குடி ரூ.80, பொரி ஒரு படி ரூ.20 முதல் ரூ.50 வரை, பொட்டுக் கடலை கிலோ ரூ.100, அவல் ரூ.120, வெள்ளை பூசணி ரூ.50 முதல் ரூ.100 வரை, வாழைக்கன்று ஜோடி ரூ.40, கரும்புக் கட்டு ரூ.500 என விற்கப்பட்டது.
சில்லறை விற்பனைக் கடைகளில் இவற்றின் விலை மேலும் கூடுதலாக இருந்தது. மாலை வேளையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர், சொந்த ஊர்களுக்குப் புறப்பட்ட பயணிகள் மற்றும் கடைசி நேர கொள்முதலில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் வீதிகளில் இறங்கியதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.