

மதுரை: “எம்பி தொகுதிகள் அதிகரித்து பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வந்தால் தங்களின் வம்சாவளி ஆதிக்கம் பலவீனமடையும்,” என திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அஞ்சுகிறது என மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிராகரித்ததில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுகவின் உண்மையான மனநிலை அம்பலமாகியுள்ளது. இருக் கட்சிகளும் அரசியலில் பெண்களுக்கு உரிய இடம் கிடைப்பதை விரும்பவில்லை என்பதையும் தெளிவாக காட்டுகிறது.
திமுகவும் காங்கிரஸும் ஒரு சில குடும்பங்களுக்கும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் வட்டங்களுக்கும் அப்பால் அதிகாரம் செல்வதையும் விரும்பவில்லை என்று தெரிகிறது. காங்கிரஸும், திமுகவும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தன. முடிவெடுக்கும் நேரம் வரும் போதெல்லாம், சாக்குப் போக்குகள் கூறி அதைத் தடுத்து வந்தன.
இப்போது பிரதமர் மோடி பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்த நிலையில் மீண்டும் தடுத்து நிறுத்தியுள்ளனர். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பது அவர்கள் கூறுவது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமே. தொகுதி மறுவரையறை தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுகவால் தவறான தகவல்கள் பரப்பப் படுகின்றன. வேண்டும் என்றே தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களைத் தவறாக வழிநடத்து கின்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் கால முறை தொகுதி மறுவரையறைக்கு வழிவகை செய்கிறது. இந்த முறையால் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் உட்பட பல்வேறு பிரிவினருக்கான இடங்கள் அதிகரிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் மூன்று மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருந்தால் மொத்த எம்பிக்களின் பலம் 850 ஆக அதிகரித்திருக்கும். தனி தொகுதிகளின் எண்ணிக்கை 131-ல் இருந்து ஏறத்தாழ 205 ஆக உயர்ந்திருக்கும். தென்னிந்திய மாநிலங்களில் பிரதிநிதித்துவம் பெருமளவில் அதிகரித்திருக்கும்.
தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆக அதிகரிக்கும். ஐந்து தென் மாநிலங்களில் தற்போதுள்ள 129 எம்பி தொகுதிகள் மறுவரையறைக்குப் பிறகு 195 தொகுதிகளாக அதிகரித்திருக்கும். இந்த வாய்ப்பை காங்கிரஸும் திமுகவும் தடுத்துவிட்டது.
இதனால் 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப் பிற்குப் பிறகு தொகுதித மறுவரையறை மேற்கொள்ளும் போது தமிழ்நாட்டிற்கு 29 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். திமுகவும் காங்கிரஸின் செயலால் தமிழ்நாட்டுக்கும் தென்னிந்தியாவுக்கும் பிரதிநிதித்துவம் குறையும் நிலை எழுந்துள்ளது. தங்கள் அரசியல் தோல்விகளை மூடிமறைக்க தவறான தகவல்களைப் பயன்படுத்துகிறார்கள்.
தொகுதிகள் அதிகரித்து, அதிகளவில் பெண்கள் அரசியலில் நுழைந்தால் தங்களின் வம்சாவளி ஆதிக்கம் பலவீனமடையும் என திமுகவும், காங்கிரஸும் அஞ்சுகிறது. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மகள்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தங்களின் ஏக போகத்திற்கு சவால் விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். மேடையில் அதிகாரமளித்தல் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் நாடாளுமன்றத்திற்குள் அதை எதிர்க்கிறார்கள். அவர்களின் பாசாங்குத் தனம் இப்போது தேசத்தின் முன் முழுமையாக அம்பலமாகியுள்ளது.
இருப்பினும் போராட்டம் இத்துடன் நிற்காது. இந்தியப் பெண்கள் முன்னேறிச் செல்வார்கள். அவர்களை எந்த அரசியல் தடையும் தடுக்க முடியாது. பெண்கள் இடஒதுக்கீட்டை தடுக்க முயன்றவர்களுக்கு, இந்த நாட்டுப் பெண்கள் ஒரு வலுவான, ஜனநாயகப் பதிலடியைக் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.