மாணிக்கம் தாகூர் எம்.பி
“அதிகார பகிர்வு அவசியம்; ஆட்சி பங்கு எங்கள் உரிமை” - மீண்டும் முழங்கும் மாணிக்கம் தாகூர்!
சென்னை: “அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸின் சில தலைவர்கள் ‘ஆட்சியில் பங்கு வேண்டும்’ என ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாகூர், பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோர் நேரடியாகவே திமுவிடம் தினமும் ஒரு கேள்வியை எழுப்பி வருகிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, “ஆட்சியில் பங்கு என்ற வாதம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், மதுரையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன், “கூட்டணி கட்சிகளை திமுக அவமதிப்பது கிடையாது. உள்ளதையே எடுத்துச் சொன்னோம். கூட்டணி வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு கிடையாது என்று தெளிவாக சொல்லி விட்டார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 150-160 தொகுதிகள் வரை வெற்றி பெறும். உதய சூரியன் சின்னம் என்றால் ஒரு மாதிரி.... மற்ற சின்னம் என்றால் ஒரு மாதிரி....” என கூறியிருந்தார்.
இந்நிலையில் அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “2021-ல் 173-ல் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களைத் தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் என்ற பேச்சு வலுவடைந்துள்ள சூழலில் மாணிக்கம் தாகூர் எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளது மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது.
