

மாணிக்கம் தாகூர்
சென்னை: தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வினவியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே திமுக கூட்டணியில் தொடர்ந்து சலசலப்புகள் எழுந்துவருகின்றன. தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைப்பதில் திமுக தாமதம் செய்து வருவதாக காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகளில் சில அதிருப்தி தெரிவித்திருந்தன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மாணிக்கம் தாகூர் எம்.பி, ராகுலுக்கு நெருக்கமானவராக அறியப்படும், , அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் (AIPC) மற்றும் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் ‘ஆட்சியில் பங்கு’ என போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
சென்னையில் ஆங்கில ஊடகம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம், ‘ஆட்சியில் பங்கு’ குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘‘ஆட்சியில் பங்கு எனும் வாதம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது. இது காங்கிரஸ் உட்பட கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் தெரியும்.
கூட்டணிக்குள் ஒரு சலசலப்பை உருவாக்குவதற்கான முயற்சியே இது. திமுக கூட்டணியில் எவ்விதமான சிக்கலும் இல்லை. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துத்தான் திமுக தேர்தலை சந்திக்கும்’’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்நிலையில், நேற்றே எதிர்வினையாற்றிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “மக்கள் முடிவு செய்வார்கள் .கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006-ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு” என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார். இது விவாதப் பொருளானது.
அந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள், இன்று தனது எக்ஸ் தளத்தில், “தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” என வினவி, மீண்டும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.