India-US trade deal | “அமெரிக்காவுக்கே சாதகம், ஏனெனில்...” - ப.சிதம்பரம் விவரிப்பு

India-US trade deal | “அமெரிக்காவுக்கே சாதகம், ஏனெனில்...” - ப.சிதம்பரம் விவரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய - அமெரிக்க வர்த்தக கட்டமைப்பு இடைக்கால ஒப்பந்தம், அமெரிக்காவுக்கே அதிக சாதகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய - அமெரிக்க வர்த்தக கட்டமைப்பு இடைக்கால ஒப்பந்தம் குறித்த தனது முதற்கட்டக் கருத்துகளை, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்தியா மற்றும் அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை, எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இது ஓர் இடைக்கால ஒப்பந்தம் கூட அல்ல. இது ஓர் இடைக்கால ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு மட்டுமே.

இந்த கூட்டறிக்கையில் உள்ள இரண்டாம் பத்தியும், பல்வேறு துணைப் பிரிவுகளும் இந்த கட்டமைப்பு ஒப்பந்தத்தை மிகவும் தெளிவற்றதாக ஆக்குகின்றன. 2.4.2025, 5.9.2025, 8.3.2018, 30.7.2025, 17.5.2019 ஆகிய தேதிகளில் அமெரிக்கா பிறப்பித்த உத்தரவுகளைப் படித்து ஆய்வு செய்யாதவரை, அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளின் சரியான தன்மையை புரிந்து கொள்வது சாத்தியமற்றது.

ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இந்த கட்டமைப்பு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கே அதிக சாதகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த சமச்சீரற்ற தன்மை வெளிப்படையாகத் தெரிகிறது.

உதாரணமாக, அமெரிக்காவின் அனைத்து தொழில்துறைப் பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான உணவு மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும் நிலையில், அமெரிக்கா, இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 18% வரியை விதிக்கும். ஜவுளி, தோல் பொருட்கள், கரிம ரசாயனங்கள் போன்ற பொருட்களும் இதில் அடங்கும். இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே இந்த வரிகளை அமெரிக்கா நீக்கும்.

விமான பாகங்கள், சில வகை விமானங்கள் தவிர்த்து இந்தியா ஏற்றுமதி செய்யும் எஃகு, செம்பு, அலுமினியம் மீதான அமெரிக்காவின் வரிகள் தொடரும் என்று தெரிகிறது. பிரிவு 232-ன் கீழ் அமெரிக்கா நடத்தி வரும் விசாரணை தொடரும். இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தம் அந்த விசாரணைக்கு உட்பட்டதாக இருக்கும். இந்த இடைக்கால ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு எப்படி ஒரு கொண்டாட்டத்துக்கு உரிய விஷயமாக இருக்கும்?’’ என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

India-US trade deal | “அமெரிக்காவுக்கே சாதகம், ஏனெனில்...” - ப.சிதம்பரம் விவரிப்பு
India-US deal | “விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதுமில்லை” - நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in