தவெக​வுடன் திடீர் கூட்​ட​ணி: இனி யார் நம்மை நம்புவார்கள்?

- மணி சங்​கர் அய்​யர், காங்​கிரஸ் மூத்த தலை​வர்
தவெக​வுடன் திடீர் கூட்​ட​ணி: இனி யார் நம்மை நம்புவார்கள்?
Updated on
2 min read

அண்​மை​யில் நடந்த முடிந்த தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் காங்​கிரஸ் 28 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு 5 இடங்​களில் வென்​றுள்​ளது. இந்த வெற்றி காங்​கிரஸ் கட்​சி​யின் சொந்த பலத்​தால் கிடைத்​து​விட​வில்​லை. திமுக கூட்​ட​ணி​யால்​தான் சாத்​தி​ய​மானது. நான் எம்​.பி.​யாக இருந்த மயி​லாடு​துறை திமுக கூட்​ட​ணிக்கு எஃகு கோட்​டை​யாக இருந்​துள்​ளது. காரணம் மயி​லாடு​துறை மக்​கள​வைத் தொகு​திக்கு உட்​பட்ட 6 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் 5 இடங்​களை திமுக கூட்​டணி கட்​சிகள் வென்​றுள்​ளன. இரண்டு இடங்​கள் திமுக​வுக்​கும், தேமு​திக, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக், காங்​கிரஸ் கட்​சிகளுக்கு தலா ஓர் இடமும் கிடைத்​துள்​ளன.

அதாவது 5 தொகுதி​களில் விஜய்​யின் தவெக​வுக்கு எதி​ராக மக்கள் வாக்​களித்​துள்​ளனர். எனவே, மக்​கள் தீர்ப்பு திமுக கூட்டணிக்கு ஆதர​வாக​வும் தவெக​வுக்கு எதி​ராக​வும் அமைந்​திருப்​ப​தையே இந்த முடிவு​கள் காட்​டு​கின்​றன. கடந்த 35 ஆண்டு காலமாக தனித்​து​வ​மிக்க மயி​லாடு​துறை தொகு​தி​யுடன் கொண்ட என் தொடர்​பின் பின்​னணியி​லிருந்தே இதனை ஆழ்ந்த வருத்​தத்​துட​னும் துயரத்​துட​னும் தெரிவிக்​கிறேன்.

அதே​நேரத்​தில் மாநில அளவி​லான மக்​கள் தீர்ப்​பு, திமுக-அ​தி​முக ஆகிய இரு திரா​விட கட்​சிகளுக்கு எதி​ராக​வும், விஜய்​யின் தவெக​வுக்கு ஆதர​வாக​வும் அமைந்​துள்​ளது என்​பது உண்​மையே. விஜய் முற்​றி​லும் மதச்​சார்​பற்​றவர் என்​பதும், பரந்த திரா​விட ஒரு​மைப்​பாட்​டுக்கு உட்​பட்​ட​வர் என்​பதும் உண்​மை​தான். அதில் எள்​ளள​வும் சந்​தேகம் இல்​லை. ஆனால், நீண்​ட​கால நம்​பக​மான கூட்​ட​ணிக் கட்​சியை காங்​கிரஸ் இப்​படி திடீரென்று கைவிடு​வது மலி​வான சந்​தர்ப்​ப​வாத அரசி​யல் வாசனையை வீசுகிறது. சந்​தர்ப்​ப​வாதம்​தான் சாணக்​கிய அரசி​யலின் சாரம்.

ஆனால், அது காந்​தி​யின் காங்​கிரஸின் உண்மை அரசி​யல் அல்ல. இந்​திய தேசிய காங்​கிரஸின் மூதாதையர்​கள் இத்​தகைய சந்​தர்ப்​ப​வாத, மலி​வான அரசி​யலை ஏற்​றுக்​கொள்​வார்​கள் என்று என்​னால் கற்​பனை கூட செய்ய முடிய​வில்​லை. மேலும், எப்​போதும் யதார்த்​த​வா​தி​யான ஜவஹர்​லால் நேரு​வும் சந்​தேகப்​பட்​டிருப்​பார். நீண்ட கால​மாக கொந்​தளிப்​பான காலங்​களி​லும் நம்​முடன் நின்ற, நெருக்​கடி​யில் உறு​தி​யாக இருந்த ஒரு நேர்​மை​யான கூட்​டணி கட்​சியை மே 4-ம் தேதி வரை நாம் இகழ்ந்த ஒரு​வருக்​காக கைவிடு​வது என்​பது அரசி​யல் ரீதி​யில் அர்த்​த​முள்​ள​தா? நெறி​முறை​யான​தா? அரசி​யல் ரீதி​யில் கூட புத்​தி​சாலித்​தன​மான​தா?

இந்த கேள்வி​களோடு தவிக்​கும்​ போது, போட்டி முடிந்த பின் குதிரையை மாற்​றிக் கொள்​ளும் இந்தச் செயல் என்​னில் ஆழ்ந்த அமைதி​யின்​மையை ஏற்​படுத்​துகிறது. இத்​தகைய சந்​தர்ப்​ப​வாத மாற்​றத்​தில், மகாத்மா காந்தி கற்​றுக் கொடுத்​தது போல நன்னடத்​தை, தன்​னடக்​கம், தியாகம் ஆகியவற்​றால் தூண்டப்படா​மல், அரசி​யலின் எதிர்​காலம் நிச்​சயமற்​ற​தாக இருந்தா​லும் உடனடி பலனை நோக்கி நகர்​கிறோம் என்​பது தெளிவாகிறது. இந்​தியா கூட்​ட​ணி​யில் திமுக தலை​வர் மு.க.ஸ்டாலின் ஒரு​வர் மட்​டுமே ‘சகோ​தரர்’ ராகுல் காந்​தியை பிரதமர் வேட்பாளர் என்று பிரகடனப்​படுத்​தி​னார். அந்த நண்பரை இவ்​வாறு திடீரென கைவிடு​வதை எப்​படி நியாயப்படுத்த முடி​யும்? மேலும், ஒரு​வர் தண்​ணீரில் மூழ்​கிக்​கொண்​டிருக்​கும்​போது, கரை சேர வேண்​டும் என்​ப​தற்​காக, அந்த மூழ்​கடிப்​புக்கே பொறுப்​பான நபரோடு... ஓர் அமைச்​சர் அல்​லது இரண்டு அமைச்​சர் பதவிக்​காக நமது கவுர​வத்தை விற்றுவிடுவதா? மிக யதார்த்​த​மாக சிந்​தித்​தா​லும், நாம் நிலையான ஒரு கப்​பலில் சேரு​கிறோமா அல்​லது மூழ்​கும் கப்பலில் ஏறும் எலி​யாக மாறுகிறோ​மா?

என்​னைப் பொறுத்​தவரை, நெருக்​கடி​யான நேரங்​களில் கூட நெறி​முறை​யும் அரசி​யலும் ஒன்​றிணை​கின்​றன. நமது மிகக் கடின​மான காலங்​களி​லும் திமுக நம்​முடன் உறு​தி​யாக நின்​றது. எனவே, அவர்​களு​டன் கூட்​ட​ணியை தொடர்​வது​தான் நெறி​முறை. திமுக அரசு கடந்த 5 ஆண்​டு​களில் தமிழகத்தை ஆசிய அளவில் மிக உயர்ந்த இடத்​துக்கு கொண்டு சென்​றிருக்​கிறது.

சில ஆண்டு காலம் காத்​திருந்​து, 2029 அல்​லது 2031-ல் யாரை கூட்​ட​ணிக்கு தேர்ந்​தெடுப்​பது என்று நன்கு மதிப்​பீடு செய்து காங்​கிரஸ் முடி​வெடுத்​திருக்​கலாம்.

ஆனால், காங்​கிரஸ் கட்சி போட்​டி​யிட்ட 28 தொகு​தி​களில் 23 இடங்​களில் தவெக நம்மை தோற்​கடித்​திருக்​கிறது. இந்த பின்​னணி​யில் அக்​கட்​சி​யுடன் காங்​கிரஸ் கூட்​டணி சேரு​வது, கட்​சியை நெறியற்​ற​தாக மட்​டுமல்ல, அரசி​யல் ரீதி​யிலும் மூர்க்​க​மான​தாக காட்​டும்.

மேலும், பின்​கதவு வழியே வகுப்​பு​வாத பாஜக நுழைவதை இது எளி​தாக்​கு​மா​னால், அரசி​யல் கால்​பந்து வரலாற்​றில் மிக மோச​மான ‘சேம் சைட் கோல்’ அடித்​தவர்​கள் ஆவோம். இனி யார் நம்மை நம்புவார்கள்?

- மணி சங்​கர் அய்​யர், காங்​கிரஸ் மூத்த தலை​வர்

தவெக​வுடன் திடீர் கூட்​ட​ணி: இனி யார் நம்மை நம்புவார்கள்?
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியா? - திரை மறைவு வியூகமும், உறுதி செய்யும் அறிகுறிகளும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in