

கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார்.
இதுகுறித்து தென் கைலாய பக்தி பேரவையைச் சேர்ந்த தன்னார்வலர் ரவீந்திரன் கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஈஷாவில் 32-வது மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 15-ம் தேதி பிரம்மாண்டமான அளவில் நடைபெறுகின்றன. சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
மேலும், பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். அன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி, மறுநாள் காலை 6 மணி வரை விழா கொண்டாடப்பட உள்ளது.
ஆதியோகி சிலை முன்புறம், ஈஷா நிறுவனர் சத்குருவுடன் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம் மற்றும் சிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளது.
இரவு முழுவதும் தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவி வளாகங்கள் பொது மக்களின் தரிசனத்திற்கு திறந்திருக்கும். தியான லிங்கத்துக்கு பொதுமக்கள் அபிஷேகம் செய்யலாம்.
நடப்பாண்டு முதல்முறையாக ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஷ்வர லிங்கத்துக்கு ‘மகா அபிஷேகம்’ எனும் ஆன்மிக செயல்முறையை சத்குரு அர்ப்பணிக்க உள்ளார். மேலும், விழாவின் முக்கிய அம்சமாக நள்ளிரவு சந்தியா மற்றும் பிரம்மமுகூர்த்த நேரங்களில்
சக்திமிகுந்த தியானங்கள் சத்குருவால் வழிநடத்தப்பட உள்ளன. மேலும், பாரதப் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலை வடிவங்களை வெளிப்படுத்தும் வகையில் இரவு முழுவதும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.