தவெகவுக்கு தாவும் திமுக, அதிமுக தொழிற்சங்கத்தினர் - பின்னணி என்ன?

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

மதுரை: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மாற்றுப் பணி என்ற பெயரில் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் பெறுவது உள்ளிட்ட சலுகைகளை அனுபவிக்கும் நோக்கத்தில் திமுக, அதிமுக தொழிற்சங்கத்தினர் தவெக தொழிற்சங்கத்துக்கு தாவுகின்றனர்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தான் அதிக உறுப்பினர்களைக் கொண்டது. 2-வதாக அதிக உறுப்பினர்கள் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ளனர். 3-வதாக சிஐடியு தொழிற்சங்கமும், அதற்கு அடுத்து அரசுப் பணியாளர் சம்மேளனமும் உள்ளது.

மாநில அரசுடன் நடைபெறும் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமே அழைக்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழக நடவடிக்கைகளில் தொழிற்சங்கங்களின் பங்கு முக்கியமானது.

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சியில் அந்தந்தக் கட்சியின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பலர் மாற்றுப் பணி என்ற பெயரில் மாதம் ஒருமுறை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு சம்பளம் பெற்று வந்தனர். இவ்வாறு மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்கி வந்ததாகப் போக்குவரத்துக் கழக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

போக்குவரத்துக் கழகம் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் பெறும் வகையில் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலையில் இரு கட்சியினரும் மாறி மாறிச் சலுகைகளை அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது. போக்குவரத்துக் கழகத்தில் தவெகவுக்குப் பெரிதாக தொழிற்சங்கம் இல்லை. ஆட்சிக்கு வந்த பிறகே தவெக தொழிற்சங்கப் பெயர் பலகைகள் பணிமனைகள் முன்வைக்கப்படுகின்றன. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை மாற்றுப் பணியில் இருந்தவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அதிமுக, திமுக தொழிற்சங்கங்களைச் சேர்ந்தோர் மீண்டும் சலுகையை அனுபவிக்கும் நோக்கத்தில் தவெக தொழிற்சங்கங்களில் சேர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக அதிமுக தொழிற்சங்கத்தினர் அதிக அளவில் தவெகவுக்கு தாவி வருகின்றனர். அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கமலக் கண்ணன் சமீபத்தில் தவெகவில் சேர்ந்தார். மாவட்ட வாரியாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளைச் சேர்த்து அதிக உறுப்பினர்களைக் கொண்ட தொழிற் சங்கமாக தவெக தொழிற்சங்கத்தை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே தவெக தொழிற்சங்கத்தில் அதிமுக, திமுகவினர் சேர்ந்தாலும் முந்தைய ஆட்சிகளில் வழங்கப்பட்ட மாற்றுப்பணி சலுகை வழங்கக் கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக போக்கு வரத்துக் கழகப் பணியாளர்கள் சிலர் கூறுகையில், மாற்றுப் பணி என்ற பெயரில் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் பெறும் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தினர் அனைத்துச் சலுகைகளையும் பெறுகின்றனர். மாற்றுப் பணியில் இருக்கும் ஓட்டுநருக்கு வாகனத்தை இயக்காமலேயே விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டியதாக விருதும், பதவி உயர்வும் வழங்கப்படுகிறது.

முந்தைய ஆட்சியில் இருப்பது போல் தவெக ஆட்சியிலும் அனைத்துச் சலுகைகளையும் அனுபவிக்கலாம் என்ற நினைப்பில் அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைகின்றனர். தவெகவில் இணைந்தாலும் மாற்றுப் பணி சலுகைகளை யாருக்கும் வழங்கக்கூடாது.

அரசுப் போக்குவரத்துக் கழங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சங்க நிர்வாகிக்கு தொழிற்சங்கப் பணிகளை மேற்கொள்ள மாதம் 3 நாள் 'ஓடீ' வழங்கப்பட்டது. மற்ற நாட்களில் பணிக்கு வந்தனர். அந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூறினர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in