

சென்னை: சாதி, மதமற்றவர் என்பதை மனதார பின்பற்றி நடத்தை மூலமாக வெளிப்படுத்தினாலே போதும். அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை எனவும், அவ்வாறு சான்றிதழ் வழங்கினால் அது வெற்று விளம்பரத்துக்குத்தான் பயன்படும் என நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நடிகரும், இயக்குநருமான ஆர். பார்த்திபன் தனக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி, சாதி, மதமற்றவர் என நடிகர் பார்த்திபனுக்கு சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான நடிகர் பார்த்திபன், ‘‘எனக்கு சாதி, மதமற்றவர் என சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சான்றிதழ் வழங்கி விட்டார். அர்த்தமுள்ள ஒரு சமுதாயம் உருவாக வழி வகுத்தமைக்கு நன்றி’’ என்றார்.
அதிகாரம் இல்லை: அதற்கு நீதிபதி, ‘‘தான் சாதி, மதமற்றவர் என்பதை நிரூபிக்க சான்றிதழ் அவசியம் இல்லை. சாதி, மதமற்றவர் என்பதை மனதாரப் பின்பற்றி நடத்தை மூலமாக வெளிப்படுத்தினாலே போதும்.
இதுபோல உங்களுக்கு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு சான்றிதழ் வழங்கினால் அது வெற்று விளம்பரத்துக்குத்தான் பயன்படும். ஆனால் ஏற்கெனவே இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டேன்’’ என்றார்.
அதையடுத்து நடிகர் பார்த்திபன், “இப்போதெல்லாம் நல்லவர்கள் எனக் கூறுவதற்கு கூட சான்றிதழ் தேவைப்படுகிறது. என்னதான் நடத்தை மூலமாக வெளி்ப்படுத்தினாலும், இதுபோன்ற சான்றிதழ்கள் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்குமே” என்றார். அதையடுத்து நீதிபதி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.