

பள்ளி வகுப்பறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி.
பழநி: பழநி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவத்துக்கு உள்ளூரைச் சேர்ந்த 2 சிறுவர்கள்தான் காரணம் என திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த மானூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவுபோல் கிடப்பதைப் பார்த்த பணியாளர்கள், தலைமை ஆசிரியர் ஜெயக்குமாருக்கு அக்.5-ம் தேதி தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர்த் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.
2 நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோருக்கும் கிராமத்தினருக்கும் தெரியவந்தது. இதை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்ததைக் கண்டித்தும், இந்த சம்பவத்துக்கு காரணமானோரை கைது செய்யக் கோரியும் மாணவர்களின் பெற்றோர்கள் கடந்த 2 நாட்களாாக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், பெற்றோர், கிராமத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் எஸ்.பி. ஜெயக்குமார் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர் மீது கீரனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள்தான் காரணம் என தெரியவந்துள்ளது என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பழநியில் செய்தியாளர்களிடம் திண்டுக்கல் எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதாவது: குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள்தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. பள்ளி வளாகத்தில் கபடி விளையாடிய சிறுவர்களில் ஒருவர் மலம் கழித்துள்ளார்.
அதை மற்றொரு சிறுவர் எடுத்து குடிநீர் தொட்டியில் போட்டுள்ளார். அவர்கள் விளையாட்டுத்தனமாக செய்ததும், எந்த உள்நோக்கத்திலும் செய்யவில்லை என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும், மாணவர்கள் யார் தூண்டுதலின் பேரிலாவது இதைச் செய்தார்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மாணவர்கள் என்பதால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கவுன்சலிங் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்: இதற்கிடையே, கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் அளித்த விளக்கம் முரண்பாடாக இருந்ததோடு, குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல், மூடி மறைக்கும் விதமாக தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் (17A) வழங்கியுள்ளார்.