காலை உணவில் பல்லி: தனியார் கேட்டரிங் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Updated on
1 min read

சென்னை: பூந்தமல்லியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இறந்து கிடந்தது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தனியார் கேட்டரிங் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட தனியார் கேட்டரிங் நிறுவனம், பூந்தமல்லி அடுத்த மாங்காடு பகுதியில் உள்ள உணவு தயாரிப்பு கூடத்தில் காலை உணவைத் தயாரித்து, பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது.

கடந்த 24-ம் தேதி இந்நிறுவனம் விநியோகித்த காலை உணவில் பல்லி இறந்து கிடந்ததால், 19 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவின் பேரில், பூந்தமல்லி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தாமோதரன், சம்பந்தப்பட்ட தனியார் கேட்டரிங் நிறுவனத்துக்கு நேற்று ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

மேலும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் காலை உணவை ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை செய்த பிறகு மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

காலை உணவில் பல்லி:  தனியார் கேட்டரிங் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
நேபாள வெள்ளப் பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 380+ சுற்றுலா பயணிகள் மாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in