“தவெகவுடன் அதிமுக இணையும் என பேசினால் ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை” - கே.பி.முனுசாமி

“தவெகவுடன் அதிமுக இணையும் என பேசினால் ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை” - கே.பி.முனுசாமி
Updated on
2 min read

கிருஷ்ணகிரி: தவெகவுடன், அதிமுக இணையும் என இனி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும் ஜாம்பவான்தான். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட, விஜய்பாஸ்கர் போன்றவர்கள் தான் கட்சியை விட்டுச் சென்ற ஓடுகாலிகள், சந்தர்ப்பவாதிகள்.

திமுக, விசிக, அதிமுக என வாய்ப்பு கிடைக்கும் இடங்களுக்கு எல்லாம் ஓடியவர் தான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. தவெகவுடன், அதிமுக இணையும் என இனி அவர் பேசினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கரூர் சம்பவத்தில் ‘ஒரு கணக்கு இருக்கிறது’ என பேசி உள்ளார். அவர் ஆட்சியில் அமர்ந்து கொண்டு காவல்துறையை மிரட்டி வருகிறார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஆட்சியில் இருந்து கொண்டு காவல்துறையினரை மிரட்டி, இந்த வழக்கை நீர்த்து போகச் செய்யலாம் என முயற்சி செய்கிறார். தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு, எல்லா கட்சிகளையும் உடைக்க முயற்சி செய்கிறது. எனவே தான் நியாயம் கேட்டு ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்கள். அதில் தவறு இல்லை.

தவெக அமைச்சர், எம்எல்ஏ மீது புகார் எழுந்தபோது நடவடிக்கை எடுக்காத முதல்வர், ஜனநாயக முறைப்படி விமர்சனம் செய்த எம்எல்ஏ-வை கைது செய்ய உத்தரவிட்டு உள்ளார். இது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.

அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள் பனையூர் கேட்டின் முன்பு நின்று கேட் எப்போது திறக்கும்? என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு, பட்டியில் இருந்து ஆட்டுக்கூட்டம் ஓடுவது போல், ஓடிச் சென்று பார்க்கும் தலைவர் புஸ்ஸி ஆனந்த்தான். அக்கட்சியின் தலைவரைக் கூட அவர்களால் பார்க்க முடியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்திருந்தால், இவர்களுக்கு அங்கே அமைச்சர் பதவி கிடைக்காது, அங்கு நுழைய முடியாது. ஆனால், தவெக தொண்டர்கள் இல்லாத கட்சி, ரசிகர் மன்றம் போன்ற கட்சி. நாம் போய் அதை ஆக்கிரமிப்பு செய்து கொள்ளலாம், பதவியை பிடித்துக் கொள்ளலாம் என்கிற நப்பாசையில் சிலர் சென்று உள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு மரியாதை இல்லை.

முதல்வர் விஜய், சினிமா போன்று அமைச்சரவையில் தனக்கு வேண்டியவர்களை உட்கார வைப்பது. தவறான முன் உதாரணமாகும். அரசு தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் முறையாக செயல்படவில்லை என்றால், தன்னிடத்தில் மனு வழங்குங்கள் என ஆளுநர் சொல்வதில் தவறில்லை. அதிமுக பழனிசாமி, திமுக ஸ்டாலின் ஆகியோர் முதல்வர்களாக இருந்த போது, எந்த நேரத்திலும் அவர்களை சந்தித்து பேசும் நிலை இருந்தது.

ஆனால், முதல்வர் விஜய்யை மாலை 5 மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை. அப்படிப்பட்ட முதல்வரை நாம் தேர்வு செய்துள்ளோம். காலம் தான் இதற்கு பதில் சொல்லும். விஜய்யின் நடவடிக்கையால், தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

“தவெகவுடன் அதிமுக இணையும் என பேசினால் ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை” - கே.பி.முனுசாமி
“முருகப் பெருமான் வடநாட்டில் பிறந்தார் என கட்டுக்கதை” - ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in