

சென்னை: மதுராந்தகம், தாராபுரத்தில் தனித்துக்களம் கண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது டெபாசிட்டை இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளன.
மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக பி.சுகந்தியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.லட்சுமணனும் போட்டியிட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் பி.சுகந்தி 1,986 வாக்குகளையும், பி.லட்சுமணன் 1,157 வாக்குகளையும் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தனர்.
தோல்வி குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், “இந்த தேர்தல் முடிவு தெரிந்ததுதான். ஒரு அரசியலுக்காக இயங்கி வருகிறோம். எங்களுக்கு கிடைத்த வாக்குகள் மாசுபடாத வாக்குகள். எங்களுக்கு மரணமும் கிடையாது. தோல்வியும் கிடையாது” என்றார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறும்போது, “பணபலம், அதிகார பலம் எதுவுமின்றி களம் கண்டோம். வீதிகளிலும் எங்களது பயணம் தொடரும்” என்றார். தேர்தல் முடிந்த பிறகு தவெகவுக்கு ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் வாபஸ் பெறபோவதாக செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.