நியூசிலாந்துக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்: ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா சாதனை!

நியூசிலாந்துக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்: ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா சாதனை!
Updated on: 
1 min read

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பேட்டர் என்ற புதிய சாதனையை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா படைத்துள்ளார். 

வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 135 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா 28 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது அவர் விளாசிய 2 சிக்ஸர்கள் மூலம், ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் சாதனையை முறியடித்தார்.

கெய்ல் ஜேமிசன் வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தில் தனது முதல் சிக்ஸரையும், 9-வது ஓவரின் 2-வது பந்தில் 2-வது சிக்ஸரையும் ரோஹித் பறக்கவிட்டார். இப்போட்டியில் விளையாடியதன் மூலம் ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிராக 2009 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 34 இன்னிங்ஸ்களில் மொத்தம் 1157 ரன்கள் குவித்துள்ளார்.

இதில் அதிகபட்சமாக 147 ரன்கள் எடுத்துள்ளதுடன், 2 சதங்களும் 6 அரைசதங்களும், 104 பவுண்டரிகளும் மற்றும் 51 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ரோஹித்தின் சிக்ஸர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

இப்பட்டியலில் முன்னதாக பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 1996 முதல் 2015 வரை 38 போட்டிகளில் விளையாடி 35 இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களை அடித்ததே உலக சாதனையாக இருந்தது. இப்பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 28 இன்னிங்ஸ்களில் 45 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும், இலங்கையின் சனத் ஜெயசூரியா 45 இன்னிங்ஸ்களில் 41 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். மேலும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 25 இன்னிங்ஸ்களில் 29 சிக்ஸர்களையும், இந்தியாவின் விராட் கோலி 38 இன்னிங்ஸ்களில் 29 சிக்ஸர்களையும் அடித்துள்ளனர்.

இந்த 2 சிக்ஸர்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக ரோஹித்தின் சிக்ஸர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 3 சிக்ஸர்களே தேவையாக உள்ளன.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களைக் கடந்துள்ள ரோஹித், இந்தத் தொடரில் மேலும் 15 சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் நியூசிலாந்துக்கு எதிராகவும் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

மழை குறுக்கிட்ட இப்போட்டியில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்: ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா சாதனை!
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை டிஎல்எஸ் முறையில் வீழ்த்தியது இந்தியா

X