

சென்னை: அய்யா வைகுண்டர் 194-வது அவதார தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் 194-வது அவதார தின விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதேபோல, சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி நமது நாகரிக அடையாளத்தை அழித்து, நமது மக்களை அடக்க முயன்ற காலத்தில், விஷ்ணுவின் தெய்வீக அவதாரமான அய்யா வைகுண்டர், தர்மத்தைக் காக்கவும், சமூக வலிமையை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தின் உணர்வை மீண்டும் தட்டியெழுப்பும் வகையில் அவதரித்தார்.
ஒடுக்குமுறைக்கு சவால் விடுத்து, சமூகப் பாகுபாட்டைக் களைந்த அவர் நமது கலாச்சாரம் மற்றும் தார்மீக அடித்தளங்களை மீண்டும் நிலைப்படுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இடுப்பில் இருந்த துண்டை தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள். கீழ்நோக்கிப் பிடித்தாலும் மேல்நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள் என சமத்துவக் கனலை சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்.
தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம் எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது அரசும் செயல்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, தவாக தலைவர் வேல்முருகன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.