

சென்னை: தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுக்கான சான்று டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என்ற அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுக்கான சான்றுகளை டிஜிட்டல் வடிவில் பொதுமக்களே பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை தமிழகத்தில் கடந்த செப்.12 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், “டிஜிட்டல்மயம் தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றுதான் தமிழக அரசு அறி
வித்தது. எதிர்காலத்தில் கொண்டு வரக்கூடிய திருத்தத்தை சுட்டிக்காட்டி அதை உடனடியாக அமல்படுத்த முடியாது.
மேலும் தமிழக அரசின் அரசாணை மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது. எனவே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு டிஜிட்டல் சான்று தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை, சட்ட திருத்தத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
வழக்கு நிலுவையில் உள்ள வரை பழைய நடைமுறைப்படி ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுக்கான சான்றுகளை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர்.