

சென்னை: கே.கே.நகர் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இன்றி, கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அதில் வசிப்போர் அச்சத்துடன் உள்ளனர்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுப் பணித்துறை சார்பில், கே.கே.நகர், காமராஜர் சாலையில், மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு வளாகம் கடந்த 1970 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது.
இதில் தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் என 1,200 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில், தற்போது சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இந்த வளாக பராமரிப்பு மத்திய பொதுப்பணித்துறை வசம் உள்ளது. ஆனால், இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை, பராமரிப்பு இல்லை என அங்கு வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
கே.கே.நகர் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் இடிந்து விழுந்துள்ள வீட்டின் மேற்கூரைகள்.
இதுதொடர்பாக, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன முன்னாள் பொதுச்செயலாளர் துரைபாண்டியன் கூறியதாவது: கே.கே.நகர் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு வளாக கட்டிடங்களில் மேற்கூரைகள் இடிந்து விழுந்து வருகிறது.
கதவுகள், ஜன்னல்கள் உடைந்து தொங்குகின்றன. இங்குள்ள குடிநீர் தொட்டிகள்,கிணறு பராமரிப்பின்றி அசுத்தமாக கிடக்கின்றன. இதனால் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. குப்பைகளை முறையாக அகற்றாததால், ஆங்காங்கே குப்பைகள் குவியல், குவியலாக கிடக்கின்றன.
சாலைகள் கரடு முரடாக பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளன. தெரு விளக்குகள் எரியாததால், சமூக விரோதிகள் இப்பகுதியை மது அருந்துமிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இரவு நேரங்களில் சாலையில் விஷப் பூச்சிகள் சுற்றுவதால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள குழந்தைகள் பூங்கா பராமரிப்பின்றி, பயன்பாடற்று கிடக்கிறது.
கழிவுநீர் வெளியேற்றத்திலும் சிக்கல் உள்ளது. மழை நீர் வடிகாலில் தூர் வாராததால், மழைநீர் விரைந்து வடியாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியில் பராமரிப்புக்கு போதிய பணியாளர்கள் இல்லை.
இருப்பவர்களும் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களும், பராமரிப்பில் திறன் பெற்றவர்களாக இல்லை. இதனால், இந்த வளாகத்தில் வசிக்கு வரும் மக்கள், உறுதியற்ற கட்டிடத்தில், இருள் சூழ்ந்த பகுதியில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
முறையாக பராமரிக்க மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.