எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் இலவச செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தை

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் இலவச செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்திலேயே முதன்முறையாக, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இலவச செயற்கைக் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் கடந்த 2024 ஜூன் 7-ம் தேதி ரூ.6.97 கோடியில் அமைக்கப்பட்டது.

மருத்துவமனையின் இயக்குநர் குப்புலட்சுமியின் சிறப்பான செயல்பாட்டால், இந்த மையத்தில் குழந்தை இல்லாத பல பெண்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் 32 வயது பெண் ஒருவருக்கு, கருப்பையில் கருமுட்டை செலுத்தப்பட்டது. 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த அந்தப் பெண்ணுக்கு மருத்துவ குழுவினரால் தீவிர கண்காணிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூன் 23-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணுக்கு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. திட்டமிட்ட தேதிக்கு சில வாரங்களுக்கு முன்பாகவே பிரசவ வலி ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

ஒரு குழந்தை 1.3 கிலோ, மற்றொரு குழந்தை 1.28 கிலோ எடையில் பிறந்துள்ளன. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இரண்டு குழந்தைகள் உள்ளன.

தமிழகத்தில் முதல்முறை

தற்போதைய நிலையில், இலவச செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சுமார் 500 பெண்கள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். ஒன்பது பெண்கள் கருத்தரித்துள்ளனர்.

தமிழகத்தில் முதல்முறையாக அரசு மகப்பேறு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் மூலம், பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மருத்துவமனை இயக்குநர் குப்புலட்சுமி மற்றும் மருத்துவ குழுவினருக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஏழைகளுக்கு வரப்பிரசாதம்

தமிழகத்தில் தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தனியார் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பல லட்சங்கள் செலவாகும் என்பதால், அங்கு வசதி படைத்தவர்கள் மட்டுமே செல்லும் நிலை உள்ளது.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் இலவச செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தை
பள்ளிக்கரணை சதுப்புநிலம் அருகே 1 கிமீ சுற்றளவு கட்டுமான தடையை நீக்க கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in