

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை பொறுத்தவரையில் தவெக அரசு அரசியலை விடுத்து மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு முதல்வர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை விமான நிலையத்தின் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், சென்னை நகரின் வளர்ச்சியை மையப்படுத்தியும் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. பரந்தூர் பகுதியில் முந்தைய திமுக அரசு இடத்தை தேர்வு செய்வதற்கே பல காலம் தாமதம் செய்தது.
பெரும் தாமதம், நெருக்கடி, சிக்கல் என பல கட்ட தடைகளை தாண்டி விமான நிலையத்திற்கு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
ரூ.27,400 கோடி மதிப்பில், சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக சுமார் 1,700 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கும் பணி கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எதற்காக இந்த திட்டம் கைவிடப்படுகிறது என்பது குறித்து விரிவான விளக்கம் எதுவும் தரப்படவில்லை. முதல்வர் விஜய்யின் இந்த முடிவு என்பது முழுக்க முழுக்க அரசியல் அன்றி வேறல்ல. தேர்தலுக்கு முன்பு பரந்தூர் பகுதிக்கு சென்ற விஜய், தவெக ஆட்சியமைந்தால் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படும் என பேசினார். எனவே பரந்தூர் விமான நிலையத்தை தவெக அரசு முழுக்க முழுக்க அரசியலாகவே பார்ப்பதாக தெரிகிறது.
பரந்தூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை தவெக அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது. இதற்காக செலவிடப்பட்ட இழப்பீட்டுத் தொகை என்னாகும் என்னாகும்?
தவெக அரசின் இந்த முடிவால் சென்னைக்கு புதிய விமான நிலையம் என்பது கானல் நீராகி விடும். இப்போது பரந்தூர் வேண்டாம் என்றால் தவெக அரசு என்ன செய்யப்போகிறது?
வேறு இடம் என்றால் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பது பெரும் காலதாமதமாகும் என்ற கவலை எழுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் புதிய இடத்தை அடையாளம் காணுவது எப்படி, எப்போது என்ற கேள்வி எழுகிறது.
நாடு முழுவதும் பல நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணி பெருமளவு முடிந்து வருகின்றன. சென்னையின் தற்போதைய விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறன் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. பெங்களூரு, ஹைதராபாத் என தென் மாநிலங்களில் உள்ள மற்ற பல விமான நிலையங்கள் சென்னையை முந்தி செல்கின்றன.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டால் அந்த பகுதியின் ஒட்டுமொத்த போக்குவரத்து மற்றும் வணிக வளர்ச்சியும் பெரிய அளவில் தடைபடும்.
மெட்ரோ ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிலையும் கேள்விக்குரியாகி விடும். பூந்தமல்லி வரை இருக்கும் மெட்ரோ ரயில் திட்டமும் பரந்தூரை மையப்படுத்தி நீட்டிக்கப்படவும் திட்டமிடப்பட்டு இருந்தது.
பரந்தூர் விமான நிலையத்தை முதன்மைப்படுத்தி பரந்தூர் வழியாகச் செல்லும் வகையில் சென்னை - பெங்களூர் விரைவு வழிச்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் நிறுத்தப்பட்டால், பல கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட சென்னை - பெங்களூர் விரைவுச் சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறது.
தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை பொறுத்தவரையில் தவெக அரசு அரசியலை விடுத்து மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு முதல்வர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடும் முடிவை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி முழுவீச்சில் நடத்தி முடித்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்” என்று எல்.முருகன் கூறியுள்ளார்.