பழநி நில மோசடி வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

சிபிசிஐடி விசாரணையை தொடர ஐகோர்ட் உத்தரவு
பழநி நில மோசடி வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
Updated on
2 min read

மதுரை: பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க திமுக, அதிமுக மற்றும் அறக்கட்டளை நிர்வாகி தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் தனிநபர்கள் பெயருக்கு மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பழனி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், திமுகவை சேர்ந்த பழநி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுக்களில், “பழநி கோயிலுக்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமான சார் பதிவாளரை விடுமுறையில் அனுப்பிவிட்டு பொறுப்பு சார் பதிவாளரை நியமித்து பதிவு நடைமுறைகள் முடிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் பலருக்கு தொடர்புள்ளது. இதை சிபிசிஐடி போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாது. எனவே சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

மனுக்களை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், ‘நிலத்தின் உண்மையான மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல். ஆனால் பத்திரத்தில் நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி என குறைத்து காட்டப்பட்டுள்ளது.

கோயில் நிலம் பதிவு தொடர்பாக தனி நீதிபதி ஏப்.10-ல் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில் ஜூலை 3 வரை மேல்முறையீடு செய்யவில்லை.

பத்திரப் பதிவு முடிந்ததும் அறநிலையத் துறை அமைச்சர் பத்திரப்பதிவில் தவறு நடந்துள்ளதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகே கைது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இந்த மோசடியின் பின்னால் பலர் உள்ளனர். அவர்கள் யார்? பணம் கொடுத்தவர்கள் யார்? யாருக்காக இந்த நிலத்தை வாங்கினார்கள் என்பது தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

கோயில் நிர்வாகம் தரப்பில், “சிபிசிஐடி விசாரணைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது. அந்த நிலத்தை பத்திரப் பதிவு செய்ய வேண்டாம் என பதிவுத் துறைக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், “பத்திரப் பதிவு மோசடி தொடர்பாக ஜூலை 13-ல் பழநி அடிவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. 1988 ஆண்டு முதல் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த மனுக்கள் அரசியல் நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றை பொது நல மனுக்கள் என்ற அடிப்படையில் விசாரிக்க முடியாது. பொது நலன் சார்ந்த மனுக்களை மட்டுமே பொதுநல வழக்காக விசாரிக்க வேண்டும். எனவே 3 மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், கோயில் நில மோசடி தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தொடரலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

பழநி நில மோசடி வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
அரிசி, பருப்பு, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய கம்யூ. வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in