

சென்னை: மூன்று முக்கிய விரைவு ரயில்கள், புதிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்களின் பயணத்தேவைகளைக் கருத்தில் கொண்டு, முக்கியமான விரைவு ரயில்கள் சில குறிப்பிட்ட நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் முன்வைக்கப் பட்டது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, தற்போது 3 முக்கிய ரயில்களுக் கான புதிய நிறுத்தங்களை உறுதி செய்துள்ளது.
ஆன்மிகச் சிறப்புமிக்க ராமேசுவரம் - அயோத்தி விரைவு ரயில், இனி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதேபோல், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி விரைவு ரயில் இனி கோவை மாவட்டப் பொதுமக்களின் வசதிக்காக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை சென்ட்ரல் - கோவை (கோவை எக்ஸ்பிரஸ்) விரைவு ரயில், இனி திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இந்த புதிய ரயில் நிறுத்தங்கள் அறிவிப்பானது, அந்தந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகை
யில் அமைந்துள்ளது. தமிழக மக்களின் ரயில்வே தொடர்பான கோரிக்கை களுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வரும் பிரதமர் மோடிக்கும், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.