

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் அரசை் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகச் சாடியுள்ளார்.
சிலிகுரியில் நடைபெற்ற 9-வது சர்வதேச சாந்தல் மாநாட்டில் பங்கேற்கக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தந்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் போது, மாநாடு நடைபெற வேண்டிய இடத்தைத் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடைசி நேரத்தில் மாற்றியதாகவும், குடியரசுத் தலைவரை வரவேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ அல்லது அமைச்சர்களோ வரவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும், போதிய இடவசதி இல்லாத சிறிய இடத்தில் இந்த மாநாட்டை நடத்தியது குறித்து குடியரசுத் தலைவர் முர்முவே தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். "மம்தா எனது தங்கை போன்றவர்; அவர் ஏன் கோபமாக இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இது வெட்கக்கேடானது, இதற்கு முன் நடந்திராதது. ஜனநாயகம் மற்றும் பழங்குடியினச் சமூகங்களின் மேம்பாட்டில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இதனால் மனமுடைந்துள்ளனர்.
பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரே வெளிப்படுத்தியுள்ள இந்த வலியும் வேதனையும், இந்திய மக்களின் மனதில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் அரசு உண்மையிலேயே அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டது. குடியரசுத் தலைவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்புக்கு அவர்களது நிர்வாகமே பொறுப்பாகும்.
சாந்தல் பண்பாடு போன்ற மிக முக்கியமான ஒரு விஷயம் மேற்கு வங்க அரசால் இவ்வளவு அலட்சியமாகக் கையாளப்படுவது துரதிர்ஷ்டவசமானது.
குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது, அந்தப் பதவியின் புனிதத்தன்மை எப்போதும் மதிக்கப்பட வேண்டும். மேற்கு வங்க அரசுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் நல்ல புரிதல் கிடைக்கும் என்று நம்புவோம்" இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.