“கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஹிட்லர் போலவே முதல்வர் விஜய் செயல்படுகிறார்” - கே.பி.முனுசாமி

“கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஹிட்லர் போலவே முதல்வர் விஜய் செயல்படுகிறார்” - கே.பி.முனுசாமி
Updated on: 
1 min read

கிருஷ்ணகிரி: “தமிழகத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக முதல்வர் விஜய், ஹிட்லரைப் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அதிமுக அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் ஆட்சி செய்த அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து சுதந்திரத்துக்கு தடை விதித்தது கிடையாது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் விஜய், ஹிட்லரைப் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஹிட்லருடைய ஆட்சியில்தான் எதையுமே சொல்ல முடியாத ஒரு நிலைமை இருந்தது.

இதேபோல, தமிழகத்தில் ஒரு பேராசிரியரை விலை உயர்வு பற்றி பேசியதற்கு கைது செய்கிறார்கள். அரசுக்கு எதிரான கருத்துகள் சொன்னாலே கைது என்கிற மாதிரி இருக்கிறது.

விலைவாசி உயர்வில் தமிழகம் உச்சத்தில் இருக்கிறது. அரிசி, எண்ணெய், பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இது 6 மாதத்தில் விஜய் செய்த சாதனையாகும். தமிழக அரசு எல்லா வகையிலும் முடங்கி உள்ளது.

நிரந்தர முதல்வர் என்கிற சிந்தனை வந்தால், அது ஆணவத்தில் சர்வாதிகார சிந்தனை வந்துவிடும். முதல்வரும் அதே சிந்தனையில் செயல்பட்டு வருகிறார். இதேபோல் செயல்பட்டால், அடுத்த தேர்தலில் தவெக டெபாசிட் கூட பெற முடியாத நிலை ஏற்படும்.

அதிமுக ஆட்சிக் காலங்களில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக சத்துணவு, உடை, சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவர்கள் வளர்ந்து தங்களது சொந்த காலில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

தற்போதைய தவெக அரசு கொண்டு வந்துள்ள தாய் மாமன் திட்டத்தால், அந்த குழந்தையின் எதிர்காலம் எந்த அளவுக்கு உயரும் என சிந்தித்துப் பாருங்கள். தவெகவினர் சட்டம் - ஒழுங்கை கையில் எடுத்துக் கொண்டு தாந்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

பொதுமக்களை பாதிக்கின்ற வகையில் தவெகவினர் செயல்பாடுகள் உள்ளன. அவர்கள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பாராமுகமாக உள்ளது. தொண்டர்களை கட்டுப்படுத்த சக்தி இல்லாத தலைவராக முதல்வர் விஜய் உள்ளார். இந்த ஆட்சியை விரைவில் மக்கள் வெளியேற்றுவார்கள். இதற்கான வேலைகளை முதல்வரே செய்து கொண்டிருக்கிறார்.

எதையுமே செய்யாமல், மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வராமல், ரீல்ஸிலேயே ஓடிக் கொண்டிருக்கிறது தவெக ஆட்சி.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆற்றில் தண்ணீரில் நுரை பொங்குவதற்கு அதிக அளவில் ஷாம்பு, சோப் எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என சொல்கிறார். இதன்மூலம் ஒவ்வொரு அமைச்சரும், தங்களது திறமையின்மையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

“கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஹிட்லர் போலவே முதல்வர் விஜய் செயல்படுகிறார்” - கே.பி.முனுசாமி
பாஸ்போர்ட் தொடர்பான மனுக்களை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: ஐகோர்ட்

X