

சென்னை: சென்னையில், மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டம், முதல்கட்ட நீட்டிப்புக்கு பிறகு, 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
இதையடுத்து, விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு, இத்திட்டத்தில் சில திருத்தம் மேற்கொண்டு, 13 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் ரூ.9,445 கோடி மதிப்பில் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒப்புதல் கிடைத்த பிறகு, விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 116.1 கி.மீ.தொலை வுக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இந்த 3 வழித்தடங்களில் 2 வழித்தடங்களை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்மொழியப் பட்ட கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் செங்கல்பட்டு வரை மெட்ரோ வழித்தடத்தை நீட்டிக்கவும், அசிசி நகர்- விம்கோ நகர் வரை நீட்டிக்கவும் மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த 2 திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று ஒப்பந்தப் புள்ளி கோரியது.
அதன்படி, சென்னை மெட்ரோரயில் முதல் கட்டத்தின் 1-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, முன்மொழியப் பட்ட கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தடத்தை செங்கல்பட்டு வரை 27 கி.மீ. தொலைவுக்கு நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இது தவிர, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் மாதவரத்தில் உள்ள அசிசி நகரில் இருந்து விம்கோ நகர் வரை 11 கி.மீ. தொலைவு வரை நீட்டிப்பதற் கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவும் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு, தற்போதுள்ள விம்கோ நகர் மெட்ரோ நிலையத்துடன் இணைப்பதன் மூலம் நகரின் வடக்குப் பகுதியில் மெட்ரோ இணைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “இந்த விரிவான திட்ட அறிக்கை யில், தினசரி எத்தனை பேர் பயணிப் பார்கள் என்ற தோராயக் கணக்கீடு, மெட்ரோ தடம் எதன் வழியாகச் செல் லும் மற்றும் நிலையங்கள் அமைய விருக்கும் இடங்கள், ரயிலின் பெட்டிகள், சிக்னல் முறை மற்றும் மின்சாரத் தேவைகளின் விவரம், திட்டத்துக்கு தேவைப்படும் அரசு, தனி யார் நிலங்களின் பரப்பளவு, கட்டு மானத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், அதற்கான மாற்றுத் திட்டங்கள். திட்டச் செலவு, நிதி உட்பட பல்வேறு விவரங்கள் இடம் பெறும். இரண்டு திட்டங்களுக்கான அறிக்கைகள் தயாரிப்பு பணி 4 மாதங்களில் முடிவடையும். அதன்பிறகு. தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றன.