சென்னை: கடல் அலையில் சிக்கி மாணவன், மாணவி உயிரிழப்பு

சென்னை: கடல் அலையில் சிக்கி மாணவன், மாணவி உயிரிழப்பு
Updated on
1 min read

பொன்னேரி: விழுப்புரத்தைச் சேர்ந்த கிருத்திகா (19), சென்னை, அம்பத்தூர் அருகே சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், விடுதியில் தங்கி பி. டெக் (ஐடி) 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில், ஆவடி வைஷ்ணவி நகரைச் சேர்ந்த ஆகாஷ் (20), பி.இ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று கல்லூரி விடுமுறை என்பதால், கிருத்திகா, ஆகாஷ், கல்லூரியில் படிக்கும் சக மாணவ- மாணவிகளான, சேலத்தைச் சேர்ந்த பவித்ரா (18), சோழவரத்தைச் சேர்ந்த ஷிவானி (19), அவர்களின் நண்பர் காவாங்கரையைச் சேர்ந்த தருண் (21) ஆகிய 5 பேரும் நேற்று காலை சென்னை எண்ணூர்- பாரதியார் நகர் பகுதியில் உள்ள வங்காள விரிகுடா கடல் கடற்கரைக்கு சென்றனர்.

இச்சூழலில், கடற்கரையை நோக்கி ஆர்ப்பரித்து வந்த ராட்சத அலையில் சிக்கிய கிருத்திகாவும், ஆகாஷும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதையடுத்து, கடற்கரை பகுதிகளில் மீன்பிடி வலைகளை சரி செய்துக் கொண்டிருந்த மீனவர்கள், கடலில் இறங்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட கிருத்திகா, ஆகாஷ் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்பணியில், கடலில் மூழ்கி தத்தளித்த கிருத்திகா மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே கிருத்திகா உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, தகவலறிந்த எண்ணூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் 8 பேர் சம்பவ இடம் விரைந்து, கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட ஆகாஷை தீவிரமாக தேடினர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்த அப்பணியில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் ஆகாஷ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

சென்னை: கடல் அலையில் சிக்கி மாணவன், மாணவி உயிரிழப்பு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன் உயிரிழந்த விவகாரம்: பொக்லைன் இயந்திர உரிமையாளர் கைது @ சென்னை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in