தமிழக உள்துறை செயலராக கார்த்திக் நியமனம்: தலைமைச் செயலர் சாய்குமார் அறிவிப்பு

தமிழக உள்துறை செயலராக கார்த்திக் நியமனம்: தலைமைச் செயலர் சாய்குமார் அறிவிப்பு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தின் புதிய உள்துறை செயலராக ஏ.கார்த்திக்கும், மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானியும் நியமிக்கப்பட் டுள்ளனர். வேளாண் துறை செயலராக என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

உள்துறை செயலராக இருந்த கே.மணிவாசன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்த ராஜேஷ் லக்கானி தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் செயல்படுவார்.

மேலும் மின்வாரியத் தலைவராக இருந்த அருண்ராய், நிதித்துறை (செலவினப் பிரிவு) செயலராகவும், அப்பதவியில் இருந்த என்.வெங்கடேஷ், வேளாண் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் (சிட்கோ) தலைவர் ஏ.கார்த்திக், உள்துறை செயலராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் சிவ கிருஷ்ணமூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராகவும், அப்பதவியில் இருந்த ஆர்.வைத்திநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையராகவும், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது மின் வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் லக்கானி, சமீபத்தில் மத்திய அரசுப்பணியில் இருந்து திரும்பிய நிலையில், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த திமுக ஆட்சியின் தொடக்கத்தில், மின்வாரிய தலைவராக பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக உள்துறை செயலராக கார்த்திக் நியமனம்: தலைமைச் செயலர் சாய்குமார் அறிவிப்பு
தனித்துப் போட்டியிட்ட இடதுசாரிகள் படுதோல்வி: மதுராந்​தகம், தாராபுரம் இடைத்தேர்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in