

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது, நவம்பர் 24ல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டு தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொங்கியது. தீபத்திருவிழாவுக்கான கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்களுடன் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர்.
பின்னர் காலை 6.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சுமார் 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர். அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றதையடுத்து, விழாவின் முதல் நாளான நேற்று காலை பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்களில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், வெள்ளி, அதிகார நந்தி, ஹம்சம்,சிம்ம வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி நடைபெற உள்ளது.
பத்து நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவில் 6ம் நாள் விழாவாக வரும் 20ம் தேதி 63 நாயன்மார்கள் ஊர்வலமும், அன்று இரவு வெள்ளி ரத ஊர்வலமும் நடைபெறுகிறது.
7ம் நாள் திருவிழாவாக வரும் 21ம் தேதி மகா ரதம் தேரோட்டம் நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய விழாவான தீபத்திருவிழா நவ.24ம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் சுவாமி சன்னதியில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.
தீபத்திருவிழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து இந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி போதிய முன்னேற்பாடு வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொடியேற்ற விழாவில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.உதயகுமார், முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, போளூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அபிஷேக், கோயில் தக்கார் உ.மீனாட்சிசுந்தரம், கோயில் இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.