

சென்னை: திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸாரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் கல்யாணசுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு எனக்கு கடந்த 28-ம் தேதி சம்மன் வந்தது. கடும் பணிச்சூழலுக்கு இடையிலும், காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வாளரை சந்தித்தேன்.
என்ன வழக்கு என்று என்னிடம் எதுவுமே கூறவில்லை. ஒருமையில் பேசிய போலீஸார், என் அனுமதியின்றி செல்போனை அராஜகமாகப் பறித்துக் கொண்டனர். பின்னர், சவுக்கு சங்கரின் வீடியோவை எனது வலைதளத்தில் பயன்படுத்தியதற்காக சம்மன் என்று கூறி, அவர் எங்கே என்று கேட்டனர்.
இதை கண்டுபிடிக்க வேண்டிய போலீஸார் எங்களிடம் கேட்டது வேடிக்கை. தவிர, அந்த வீடியோகூட, எம்.பி.கனிமொழியின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் மூலமாகவே எனக்கு கிடைத்தது.
அதிமுகவின் பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டும், பிரச்சாரப் பணியில் அதிமுகவை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்பதற்காகவே இப்படி செயல்படுகின்றனர்.
‘நமது அம்மா’ பத்திரிகையின் ஆசிரியர் நான். அரசு செய்யும் தவறுகளை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு, கடமை எனக்கு இருக்கிறது. அதை முடக்க நினைக்கும் திமுக அரசின் அராஜகத்துக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.