“திமுக ஆட்சியைவிட தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு அதிகரிப்பு” - காளியம்மாள் குற்றச்சாட்டு

அதிமுக செய்தி தொடர்பாளர் காளியம்மாள் | கோப்புப் படம்

அதிமுக செய்தி தொடர்பாளர் காளியம்மாள் | கோப்புப் படம்

Updated on
2 min read

கிருஷ்ணகிரி: “திமுக ஆட்சியை விட தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக, கிருஷ்ணகிரியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அதிமுக செய்தி தொடர்பாளர் காளியம்மாள் குற்றச்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி ரவுண்டானாவின் அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். பர்கூர் எம்எல்ஏ கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். இக்கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது.

இருப்பினும், இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் காளியம்மாள் பேசியதாவது: “புதிய ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. 300-க்கும் மேற்பட்ட கொலைகளும், 10-க்கும் மேற்பட்ட நீதிமன்றக் காவல் மரணங்களும் நிகழ்ந்துள்ளன. கடந்த திமுக ஆட்சியை விடத் தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்காமல், சிலர் தவறான வார்த்தைகளைப் பேசி அவையை கேலிக்கூத்தாக மாற்றினர். மேட்டூர் அணையில் 100 அடி நீர்மட்டம் கூட எட்டாத நிலையில், அவசர கதியில் திறக்கப்பட்டு விளம்பர அரசியல் செய்யப்படுகிறது. இதற்காக இரும்பு கேட் அமைக்க மட்டுமே 6 கோடிகள் வீணடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பல பகுதிகளில் மக்கள் குடிநீரின்றித் தவிப்பதோடு, தினமும் 8 மணி நேரம் வரை மின்தடையை எதிர்கொள்கின்றனர். சாதாரண மக்களின் மின் கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.6,000 வரை பன்மடங்கு உயர்த்தப்பட்டு சுமை ஏற்றப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவர் மிசாவில் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டதை கேலி விதமாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் புரிதல் உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்க கஜானாவில் காசு இல்லை எனக் கூறும் தவெக அரசு. தங்களின் சொந்த வசதிக்காகப் பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றக் கட்டிடம் கட்டத் துடிப்பது மக்கள் விரோதப் போக்கு. நாடாளுமன்ற கட்டிடம் கட்டவே ரூ.900 கோடி தான் செலவான போது. முதல்வர் விஜய்யின் வசதிக்காக சட்டப்பேரவை கட்டிடத்திற்கு ரூ.1,200 கோடி செலவு செய்யப்படுகிறது.

விஜய்யின் ஜோசியர் புதிய கட்டிடத்தில் உட்கார்ந்தால் தான் பிரதமராக முடியும் என கூறியதால் தான் 7 மீனவ பகுதி மக்களை காலி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தியாகிகள் ரத்தம் சிந்தி காத்த தமிழ் மண்ணில், சட்டப்பேரவையில் ‘மனமார்ந்த நன்றி’ என்பதற்குப் பதிலாக 'மன்மத நன்றி' என்று பேசிவிட்டு, அதைத் தவறென்று கூட உணராமல் மேடைகளில் நியாயப்படுத்துவது கேவலமானது. காவிரி நதி நீர் விவகாரம், கச்சத்தீவு பிரச்சனை, விவசாயிகள் மற்றும் கடலோர மீனவர்களின் துயரங்கள் பற்றி ஆளும் ஆட்சியாளர்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை” என்று காளியம்மாள் கூறினார்.

<div class="paragraphs"><p>அதிமுக செய்தி தொடர்பாளர் காளியம்மாள் | கோப்புப் படம்</p></div>
“அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” - மு.க.ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in