“ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆன்மா ஓபிஎஸ்-ஸை மன்னிக்காது” - கடம்பூர் ராஜூ காட்டம்

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ
Updated on
1 min read

கோவில்பட்டியில் சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரை சந்திப்பதோ, திமுகவில் இணைவதோ ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். அதை விடுத்து, "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் ஸ்டாலின் முதல்வர் ஆவார்" என்று, ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதை அவரது மனசாட்சியே ஒப்புக் கொள்ளாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மா ஒரு காலமும் அவரை மன்னிக்காது. அதற்காக நிச்சயம் அவருக்கு தண்டனை உண்டு.

'என்னுடைய அரசியல் லாபத்துக்காக திமுகவுக்கு செல்கிறேன்' என்று சொன்னால், எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. 1989-ம் ஆண்டு தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் தான் ஓபிஎஸ். இவற்றை எல்லாம் மன்னித்துதான் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நகர்மன்ற உறுப்பினர், முதல்வர் பதவிகளை வழங்கியவர் ஜெயலலிதா.

திமுகவை எதிர்த்துதான் அதிமுகவை மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கினார். அதிமுகவுக்கு அரசியல் நேர் எதிரி திமுக தான். தீய சக்தி என்ற அடைமொழியோடு திமுகவை நாட்டு மக்களுக்கு அடையாளப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அதிமுக தொண்டர்களை எம்.ஜி.ஆர். ரத்தத்தின் ரத்தங்கள் என்றுதான் அழைப்பார். அதிமுக ரத்தம் இருக்கும் வரை தொண்டர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள்.

ஆனால், இன்றைக்கு ஓபிஎஸ் உடலில் ஓடுவது அதிமுக ரத்தமா..? என்பதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். எவ்வளவு நம்பிக்கை துரோகமாக இந்த இயக்கத்தில் பணியாற்றி இருந்திருக்கிறார் என்பது இன்றைக்கு அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்தவர்கள் ஒரு இலையை எம்ஜிஆராகவும், மற்றொரு இலையை ஜெயலலிதாவாக பார்ப்பார்கள். வேறு சின்னத்துக்கு வாக்களிக்க மாட்டார்கள். விஜய்யை பார்த்து திமுகதான் பயப்படுகிறது. அதற்காகத்தான் இருக்கிற கட்சி, போன கட்சி, வந்த கட்சி என இடம் இருக்கோ இல்லையோ, எல்லாரையும் சேர்த்து திமுக ஓவர் லக்கேஜ் ஆகிவிட்டது.

ஓவர் லக்கேஜ் வண்டி ஓடாது. கூட்டணி என்ற பெயரில் இருக்கிற கட்சிகளை எல்லாம் இழுத்து போடுகின்றனர். எந்த கட்சியாலும் அதிமுக வாக்கு வங்கியை பாதிக்க முடியாது. வரும் தேர்தலில் வெற்றி பெறப்போவது அதிமுக கூட்டணி தான். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கடம்பூர் ராஜூ
“திமுக ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த பாஜக முயற்சி” - மதுரையில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in