

மதுரையில் நடந்த தென் மண்டல திமுக முகவர்கள் கூட்டத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்த கட்சியினர். படம்: நா.தங்கரத்தினம்
திமுக ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த பார்க்கிறார்கள், அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று பாஜக மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். எந்த சித்து விளையாட்டுக்கும் அஞ்சமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மதுரையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நேற்று நடைபெற்றது.
மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக கூட்டணி 2019 முதல் எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறது. நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். ஒவ்வொரு பூத்துக்கும் 350 வாக்குகள் தான் டார்கெட். இதை நிறைவேற்றினாலே 2.60 கோடி வாக்குகளை பெற முடியும். 200 தொகுதிகள் நிச்சயம், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது லட்சியம்.
‘ஸ்டாலின் மகளிர் படை’ மூலம் அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டுச் செல்ல சொல்லியிருக்கிறேன். குறிப்பாக தேர்தலை காரணமாக வைத்து மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை முறியடித்து ரூ.5 ஆயிரம் வழங்கியதையும், அடுத்து வரும் ஆட்சியில் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க இருப்பதையும் வீடு வீடாகச் சென்று சொல்லுமாறு கூறியிருக்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தில் அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அண்மையில் மகளிர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கியதை ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்றனர். அந்த அளவுக்கு எதிரிகள் கணிக்க முடியாதபடி நம் செயல்பாடுகள் இருந்தன.
இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பிரதமர் மோடி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. திமுக அரசின் மகளிர் இலவச பேருந்து பயணத்தால் ஒவ்வொரு பெண்ணும் மாதம் ரூ.800 வரை சேமிக்கின்றனர். இது பிரதமருக்கு வலிக்கிறது. பிரதமர் மோடி மார்ச் 1-ல் மதுரை வருகிறார். அவரிடம் மதுரை,கோவைக்கு ஏன் மெட்ரோ ரயில் வரவில்லை? தமிழகத்துக்கு ஏன் எந்த சிறப்பு திட்டமும் தரவில்லை? கீழடி அறிக்கையை ஏன் வெளியிடவில்லை? எய்ம்ஸ் ஏன் வரவில்லை? நீட் விலக்கு ஏன் தரவில்லை? கல்வி நிதியை முடக்குவது நியாயமா? என மக்கள் கேட்க வேண்டும்.
நியாயமாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கோரிக்கையாக கூட கேட்க துணிச்சல் இல்லாத துரோகியாக மாறிவிட்டார். பழனிசாமி போல் பயந்தாங்கொள்ளி இல்லை நான். ஆட்சி, பதவி மட்டுமல்ல, உயிரே போனாலும் கவலைப்பட மாட்டோம். வழக்கு போட்டால் போடு, நாங்கள் பார்க்காத மிசாவா, தடாவா?
இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகளில் திமுக மீதுதான் பாஜக அதிகளவில் ரெய்டு நடத்தியது. நம் அமைச்சர்களுக்கு அதிகளவில் அழுத்தம் கொடுக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த பார்க்கிறார்கள். எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் திமுக. சிபிஐ, ஈடி, ஐடி போன்ற எந்த சித்து விளையாட்டுகளுக்கும் அஞ்சமாட்டோம். அதற்கு வேறு ஆளை பாருங்கள். என்ன ஆனாலும் ஒரு கை பார்ப்போம். எழுந்து நிற்போம். தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடுவதால் மக்கள் ஆதரவு அளிக்கின்றனர்.
இந்தியாவில் எந்த மாநிலமும் எட்ட முடியாத வளர்ச்சியை பெற்றுள்ளோம். தினமும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். எனக்கே நினைவில் வைக்க முடியாத அளவுக்கு திட்டங்கள் உள்ளன. தேர்தல் பணியில் நாம் தான் முன்னணியில் உள்ளோம். கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகின்றன. தொகுதி பங்கீடு பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. யாருக்கு எந்த தொகுதி, யார் வேட்பாளர்கள் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்களின் கடமை.
நம் கட்சி வேட்பாளர் மட்டும் அல்ல, கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க கடுமையாக உழைக்க வேண்டும். நம் களப்பணியை பார்த்து கூட்டணி கட்சியினர் வியக்க வேண்டும். தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என கேள்வி எழுப்புங்கள். தமிழ்நாடு வெற்றிபெற வேண்டும் என்றால் திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும். அடிமை அதிமுகவும், தமிழ் விரோத பாஜகவும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.