

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனது தாயாரின் இறுதிப்பயணம் குறித்த நெகிழ்ச்சியான தருணத்தை குறிப்பிட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்புள்ள நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும்.. உங்களது மனமார்ந்த இரங்கல் செய்திகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அறிவியலைத் தாண்டி அன்பு வென்றதற்கான ஒரு சாட்சியம், என் தாயின் இறுதிப் பயணம். அடிபணிய வைத்த பக்கவாதம் மற்றும் நீண்டகால ஞாபக மறதி நோய் உடனான போராட்டத்துக்குப் பிறகு, அறிவியல் அவரது உயிர்நாடிகளைத் துடிக்க வைத்ததே தவிர, அவரது வேதனையைத்தான் நீட்டித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் உடல் நலிந்துபோயிருந்த எனது தாயைப் பார்த்த என் மனைவி, அவரிடம் பேசுமாறு என்னை வற்புறுத்தினார். “ஒரு தாயால் எப்போதுமே தன் பிள்ளையின் குரலைக் கேட்க முடியும்” என்று எனக்கு நம்பிக்கையளித்தார்.
கண்ணீர் மல்க தாயின் கரங்களைப் பற்றிக்கொண்டு, அவரை அமைதியாகப் புறப்பட அனுமதித்தேன்.“அம்மா, நீ இனிமேலும் இந்த வேதனையை அனுபவிக்க வேண்டாம். நீ உன் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்டாய். தயவுசெய்து விடுதலை அடை அம்மா. நான் எப்போதாவது உன்னை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடு. உன்னை நீயே விடுவித்துக்கொள்.”
மூடியிருந்த அவரது இமைகளுக்குப் பின்னால் ஏற்பட்ட ஒரு சிறிய அசைவு, அவர் அதைப் புரிந்துகொண்டதற்கான அறிகுறியாக இருந்தது. அந்த வார்த்தைகளுக்காகத்தான் அவர் காத்திருந்தார்.5 நாட்களுக்குப் பிறகு, அவர் மூச்சுவிட சிரமப்பட்டபோது, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்த மறுத்துவிட்டோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் நேசித்த அவரது சொந்த இல்லத்திலேயே, அவர் அமைதியாகக் கண்மூட வேண்டும் என்று விரும்பினோம்.
நானும், என் மனைவியும் அவரது கைகளைக் கோத்தபடி, அவரது ஆன்மா பிரிந்த அந்த துல்லியமான தருணத்தைக் கண்டோம்; அந்த நொடியில் அவரது முகத்தில் ஒரு பேரமைதியும், பரிபூரண நிம்மதியும் குடியேறியது. நாங்கள் அவருக்கு ஓர் உன்னதமான விடைபெறுதலை அளித்தோம்.
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகரின் திருமுறைகளை பெண் ஓதுவார் ஒருவர் பாடினார். பாடும்போதே அவர் அடக்க முடியாமல் அழுதார். பின்னர் எங்களிடம் பேசும்போது, என் தாயே தன் குரல் வழியே இறைவனிடம் அழுது அழுது மோட்ச சிவபதத்தைக் கேட்பதுபோல உணர்ந்ததாக கூறினார்.
அறிவியலால் நம் உயிர்த் துடிப்பை நீட்டிக்க முடியுமே தவிர, ஒரு கண்ணியமான இறுதிப் பயணத்தை உறுதி செய்யமுடியாது. எனது தாய் இந்த மானுட வாழ்வில் இருந்து மிக உன்னதமான ஆன்ம அமைதியோடு விடைபெற்றிருக்கிறார். எங்களுடன் உறுதுணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள். இவ்வாறு கடிதத்தில் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.