

மதுரை: தமிழகத்தில் கள் இறக்கவும், விற்கவும் அனுமதி கோரிய வழக்கில் 6 ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில் ஏப். 27-க்குள் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த ஆர்.ஆறுமுகம், உயர் நீதிமன்ற கிளையில் 2020-ல் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் 1937-ல் கள் இறக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையால் பனை மரம் வளர்ப்போர் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கள்ளுக்கான தடையை விலக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் கள்ளில் போதைக்காக பல வேதிப்பொருட்கள் கலப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கள் போதைப்பொருள் அல்ல. உடலுக்கு நல்லது. வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை பெருக்குவதற்காகவே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மதுபானங்களைவிட கள்ளில் குறைவாகவே போதை உள்ளது. எனவே மதுவிலக்கு சட்டத்தில்கள் இறக்கவும், விற்கவும் தடை விதிப்பட்டிருப்பதை நீக்கி அனுமதி தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு 2020-ல் விசாரணைக்கு வந்தபோது தமிழக உள்துறை செயலர், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை செயலர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், 2020-ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இப்போது வரை தமிழக அரசு பதிலளிக்கவில்லை. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இதனால் ஏப்ரல் 27-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் அடுத்த விசாரணையின்போது அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டனர்.