

மலை மீது உள்ள தீபத்தூணில் நேற்று மாலை 5 மணியளவில் ஏற்றப்பட்ட தீபம். உள்படங்கள்: நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.பார்த்திபன், எஸ்.வைத்தியநாதன்
படங்கள்: நா.தங்கரத்தினம்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு முதல், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அதை நிறைவேற்றிய நீதிபதி வைத்தியநாதன் வரை பலரும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருநாளின்போது மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இது மோட்ச தீபம் ஏற்றும் இடம் என்றும், இதனால் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றும் பொதுமக்களும், இந்து அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக ஒவ்வோர் ஆண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவதும், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயிலில் மட்டும் தீபம் ஏற்றுவதுமாக நாட்கள் கடந்தன.
கடந்த ஆண்டு கார்த்திகை திருநாளின்போது மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என மதுரை எழுமலையைச் சேர்ந்த இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அவர் ஒரு நாள் திடீரென திருப்பரங்குன்றம் தீபத்தூண் வரை சென்று ஆய்வு செய்துவிட்டு வந்தார். பின்னர் வழக்கை தொடர்ந்து விசாரித்து, திருக்கார்த்திகை நாளில் தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டார். ஆனால் மாவட்ட நிர்வாகம் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து தீபத்தூணில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்தது.
இதனால் மறுநாள் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. பின்னர் 144 தடையை ரத்து செய்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுடன் மனுதாரர்கள் நேரில் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அதன்படி தீபம் ஏற்ற சென்றவர்களை காவல் துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதற்காக அதிகாரிகள் மீது 2-வது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரி அவமதிப்பு நடவடிக்கையில் இருந்து அதிகாரிகள் தப்பினர்.
இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக அரசு தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கார்த்திகை மாதம் முடிந்த பிறகு விசாரணைக்கு எடுக்கப்பட்ட மேல்முறையீட்டில் சுவாமிநாதன் உத்தரவு உறுதி செய்யப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை திருநாளின்போதும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவில், மலை உச்சியில் இருப்பது தீபத்தூண்தான். அது அரசு கூறுவதுபோல் எல்லைக்கல் அல்ல என நீதிபதிகள் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தனர்.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், திருக்கார்த்திகை நாளான நவ.24-ல் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. தீபம் ஏற்றும் பொறுப்பு அதிகாரியாக மதுரை மாவட்ட ஆட்சியரை நீதிபதிகள் நியமித்தனர்.
எனினும், இந்த முறையும் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து வந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், கோயில் அறங்காவலர் குழுவை அடியோடு கலைத்தனர்.
கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றலாம் என்பதால் மத்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் நவ. 28-ல் (நேற்று) தீபம் ஏற்ற உத்தரவிட்டனர். இதை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தனர். நீதிபதிகள் இருவரும் ஒரே நாளில் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து தீபத்தூணில் தீபம் ஏற்றி உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியுள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். அதை நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளனர். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற முருக பக்தர்களின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. முருகனுக்கு நன்றி, நீதிபதிகளுக்கு நன்றி என்றனர்.