

படங்கள்: நா.தங்கரத்தினம்
தீபக் கொப்பரையை ஏந்தி சென்ற ஆட்சியர்
இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதிருப்தி அடைந்த இந்து அமைப்பினர், மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, தனது வழக்கறிஞர் மூலம், ‘தீபத்தூணில் தீபம் ஏற்றுவேன் என்று கூறவில்லை. தீபம் ஏற்றுவது எனது பணி கிடையாது.
எனது அதிகாரமும், அதற்குள் செல்லாது’ என்று கூறியிருந்தார். அவரது இந்த வாதத்தை ஏற்காத நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவை யாரும் நீர்த்துப் போகச் செய்ய முடியாது’ என்று கூறினர்.
இப்படி தீபம் ஏற்றுவது தனது பணியில்லை என்று சொன்ன மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, நேற்று காலை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை
நிறைவேற்ற நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோருடன் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றுவதற்கான பூஜைப் பொருட்களுக்கு நடந்த பூஜையில் பயபக்தியுடன் பங்கேற்றார்.
மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் கொப்பரையை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தனது கையில் ஏந்தியபடி நீதிபதிகளுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு கொண்டு செல்வதற்காக பழனியாண்டவர் கோயில் மலையடிவாரம் வரை நடந்து சென்றார். மாலையில் நீதியரசர்களுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் சென்று, தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்.
தீபக் கொப்பரையை கையில் ஏந்தியபடி வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜமுனா: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக முருகனிடம் வேண்டுதல் செய்து வந்தோம். எங்கள் வேண்டுதல் இன்று நிறைவேறி உள்ளது. மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கிறோம்.
மதுரையை சேர்ந்த ஆதிகணேசன்: தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள் போராடி வந்தனர். தற்போது, நீதிமன்றத்தால் தீர்வு கிடைத்துள்ளது. இந்துக்களின் 150 ஆண்டுகள் கனவு நிறைவேறியுள்ளது. இனி ஒவ்வொரு கார்த்திகையின்போதும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.
கோவை சூலூர் பாலச்சந்திரன்: தீபத்தை தரிசிக்க நள்ளிரவு 12 மணிக்கு சூலூரில் இருந்து புறப்பட்டு, காலை 9 மணிக்கு வந்தேன். இது முருக பக்தர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எந்தத் தடையும் இனி வரக்கூடாது என முருகனை வேண்டிக்கொள்கிறேன்.
சாத்தூரைச் சேர்ந்த சித்திரை ராமானுஜம்: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை பார்க்க வேண்டும் என சின்ன வயதிலிருந்தே காத்திருந்தேன். தற்போது, எனக்கு 87 வயதாகிறது. வரும் ஆண்டுகளில் நான் எப்படி இருப்பேன் என்பது தெரியாது. நான் இருக்கும்போதே தீபத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு அருளிய முருகப் பெருமானுக்கு எனது வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஆதிகணேசன், ஜமுனா, பாலச்சந்திரன், சித்திரை ராமானுஜம்.
‘அனுபவித்த சித்ரவதைகள் சுக்குநூறாகியுள்ளன’ - கொண்டாட்டத்தில் மலையடிவார கோட்டைத்தெரு மக்கள்
‘தீபத்தூண் விவகாரத்தால் அனுபவித்த சித்ரவதைகள் சுக்குநூறாகியுள்ளன’ என்று தீபத்தூண் விவகாரத்தில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான திருப்பரங்குன்றம் கோயிலையொட்டி அமைந்துள்ள கோட்டைத்தெரு மக்கள் தெரிவித்தனர். நேற்று நடைபெற்ற தீபம் ஏற்றும் நிகழ்வால் உற்சாகத்தில் திளைத்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அப்போதைய திமுக அரசு தீபம் ஏற்றவில்லை. இதனால் கோயிலில் சுவாமிகளை சுமக்கும் சீர்பாதங்கள், காவலாளிகள் என பல்வேறு வேலைகள் பார்க்கும் கோட்டைத்தெரு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்பகுதி பெண்கள் வீடுகள்தோறும் விளக்கேற்றி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதனால் கடந்த திமுக ஆட்சியில் காவல்துறையினர் மூலம் அவர்கள் கைது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர்.
இந்நிலையில், சிஆர்பிஎப் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்று மகிழ்ச்சியில் திளைத்தனர். கோட்டைத்தெரு வழியாக மலையடிவாரத்துக்குச் செல்லும் பாதையில் தோரணங்கள் கட்டி அலங்கரித்தனர். ஒலிபெருக்கி மூலம் முருகனின் பாடல்களை ஒலிபரப்பினர்.
கோயிலில் இருந்து பூஜைப் பொருட்களை கொண்டு வந்த நீதிபதிகள் குழுவை மேளதாளம் முழங்க, ‘அரோகரா’ கோஷத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதும் கோட்டைத்தெரு மக்கள், ‘வெற்றிவேல் வீரவேல்; முருகனுக்கு அரோகா; கந்தனுக்கு அரோகரோ’ என்ற முழக்கமிட்டனர்.
இதுகுறித்து அந்த தெருவில் வசிக்கும் சிலர் கூறுகையில், கடந்த ஆண்டு காவல்துறை மூலம் பல சித்ரவதைகளை அனுபவித்தோம். தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் மகிழ்ச்சியாக உள்ளோம். அனுபவித்த சித்ரவதைகள் சுக்கு நூறாகியுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தீபம் ஏற்றுவதற்கு பூஜைப் பொருட்களை கொண்டு செல்லும் கோயில் பணியாளர்களை உற்சாகமாக வரவேற்ற கோட்டை தெரு பகுதி மக்கள்.
மலை உச்சிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: துணை ராணுவத்தினருடன் வாக்குவாதம்
தமிழகம் முழுவதும் பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் நேற்று அதிகாலை முதலே திரண்டனர். காலையில் பக்தர்களின் ஆதார் அட்டை விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மலைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், திடீரென நண்பகல் 12 மணி அளவில் பழனியாண்டவர் கோயில் படிக்கட்டு வழியாக பக்தர்கள் மலை உச்சிக்குச் செல்ல துணை ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. இதனால், துணை ராணுவத்தினருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“பக்தர்கள் அனைவரையும் மலைக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீங்கள் எங்களை மலைக்கு செல்லவிடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம்? தர்காவுக்கு செல்பவர்களை மட்டும் அனுமதிக்கிறீர்கள். ஆனால், தீபத்தூண் செல்லும் பக்தர்களை தடுக்கிறீர்களே” என வாக்குவாதம் செய்தனர்.
அங்கு வந்த சிஆர்பிஎஃப் தென்மண்டல ஐஜி விக்ரம், “உச்ச நீதிமன்ற தீர்ப்பு முக்கியம். முதலில் அதை நிறைவேற்ற வேண்டும். நல்லபடியாக தீபத்தூணில் தீபம் ஏற்றி முடிக்க வேண்டும். எல்லோரையும் ஒரே நேரத்தில் அனுமதித்தால் மலையில் நெரிசல் ஏற்படும்” என்றார்.
இந்த சம்பவத்தை அடுத்து மலைப் பகுதியில் துணை ராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அனைத்து பக்தர்களையும் தீபம் ஏற்ற மலைக்கு மேல் அனுமதிக்குமாறு உத்தரவிட்டதை குறிப்பிட்டு துணை ராணுவத்தினரிடம் பக்தர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர்.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபன், பக்தர்கள் உதவியுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு ஏறிவந்தார்.படம்: பிடிஐ
மாவட்ட நிர்வாகம் விளக்கம்: மதுரை மாவட்ட நிர்வாகம் மூலம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் சார்பில் நேற்று நண்பகலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்நிகழ்வுக்காக கோயில் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் உரிய அனுமதி பெற்ற 50 பக்தர்கள் அடங்கிய குழுவினர் மட்டும் மலையேற அனுமதிக்கப்படுவர். அனுமதிக்கப்பட்ட குழுவினரைத் தவிர இதர பொதுமக்களும் பக்தர்களும் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எனவே, அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.ராம ரவிகுமாரின் சபதம் நிறைவேறியது
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முதல் வழக்கு தொடர்ந்தவர்
மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிகுமார். பின்னர் இதே கோரிக்கையுடன் பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை மொத்தமாக விசாரித்த தனி நீதிபதி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் கார்த்திகை 2-வது நாளில் மனுதாரர்கள் நேரில் சென்று தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தீபத்தூணில் தீபம் ஏற்றச் சென்ற ராம ரவிகுமாரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது மலைப் பாதை முன் கற்பூரம் ஏற்றி தரையில் விழுந்து வணங்கிய ராம ரவிகுமார், ‘ஐயா, சுப்பிரமணிய சுவாமி கடவுளே, உன் மலையில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர். இப்போது அனுமதி மறுத்தவர்கள் ஒரு நாள் ‘சல்யூட்’ அடித்து மலைக்கு மேல் அழைத்துச் சென்று தீபம் ஏற்றும் நாள் வரும். இது நிறைவேறும் வரை விட மாட்டேன்’ என்றார்.
அதன் பிறகும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார். சமீபத்தில் உச்ச நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க சென்றபோது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நேற்று தீபம் ஏற்றப்பட்டதை டெல்லி மருத்துவமனையில் இருந்தபடி டிவியில் பார்த்த அவர், வீடியோ வெளியிட்டு, ‘இந்து பக்தி, இந்து சக்தியாக மாற வேண்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என கூறியுள்ளார்.
தீபத்தூணில் தீபம் ஏற்றியதும் மலை அடிவாரத்தில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்த பெண் பக்தர்கள்.
ராம ரவிகுமாரின் சபதம் நிறைவேறியது
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முதல் வழக்கு தொடர்ந்தவர்
மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிகுமார். பின்னர் இதே கோரிக்கையுடன் பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை மொத்தமாக விசாரித்த தனி நீதிபதி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் கார்த்திகை 2-வது நாளில் மனுதாரர்கள் நேரில் சென்று தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தீபத்தூணில் தீபம் ஏற்றச் சென்ற ராம ரவிகுமாரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது மலைப் பாதை முன் கற்பூரம் ஏற்றி தரையில் விழுந்து வணங்கிய ராம ரவிகுமார், ‘ஐயா, சுப்பிரமணிய சுவாமி கடவுளே, உன் மலையில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர். இப்போது அனுமதி மறுத்தவர்கள் ஒரு நாள் ‘சல்யூட்’ அடித்து மலைக்கு மேல் அழைத்துச் சென்று தீபம் ஏற்றும் நாள் வரும். இது நிறைவேறும் வரை விட மாட்டேன்’ என்றார்.
அதன் பிறகும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார். சமீபத்தில் உச்ச நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க சென்றபோது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நேற்று தீபம் ஏற்றப்பட்டதை டெல்லி மருத்துவமனையில் இருந்தபடி டிவியில் பார்த்த அவர், வீடியோ வெளியிட்டு, ‘இந்து பக்தி, இந்து சக்தியாக மாற வேண்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என கூறியுள்ளார்.
ராம ரவிகுமார்
யார் அந்த அரசியல் ‘பாஸ்’ விரைவில் தெரியவரும்: ராம.சீனிவாசன் கருத்து
பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன்: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் டிஜிபி, தலைமைச் செயலர், ஆட்சியர் உள்ளிட்ட பலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தமிழக அரசுதான். நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த விடாமல் தடுத்த, உங்கள் அரசியல் ‘பாஸ்’ யார் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. யார் அந்த சார் என்ற கேள்வி மாறி, யார் அந்த ‘பாஸ்’ என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. யார் அந்த ‘பாஸ்’ என்பதற்கான பதில் விரைவில் தெரியும்.
பாஜக மாநிலப் பிரிவு அமைப்பாளர் கே.டி.ராகவன்: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வு, தமிழகத்தில் இருக்கும் இந்துக்களுக்கும், அவர்களின் நெடுநாள் போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றி. இதை இந்து விரோத தவெக அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் சரியான பதிலடியாக பார்க்கிறோம். தமிழகம் என்றைக்குமே ஆன்மிக பூமி.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்: மிகவும் மகிழ்ச்சியான நாள் இது. ஆன்மிகம், சட்டம், நீதி வென்றிருக்கிறது. இதைவிட எங்களுக்கு என்ன பாக்கியம். ஆண்டுதோறும் தீபம் ஏற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரை பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்ற பட்டர்கள்.
எந்த எதிர்ப்பும் இல்லை: நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மகிழ்ச்சி
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிய பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், தீபத்தூணில் தீபம் ஏற்றியுள்ளோம். தீபத்தூணில் தீபம் ஏற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என யாரும் தகராறு செய்யவில்லை. இங்கு எல்லோரும் சகோதரர்களாகவே வாழ்கின்றனர். இதை வைத்து மற்றவர்கள்தான் அரசியல் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
துணை ராணுவத்தினருக்கு மக்கள் மலர்தூவி வரவேற்பு: உள்ளூர் போலீஸாருக்கு எதிர்ப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பெங்களூரு, கோவை, மதுரை விமான நிலையம், உயர் நீதிமன்றத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் நேற்று காலை வந்தனர்.
அவர்கள் திருப்பரங்குன்றம் மலையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தீபத்தூண் உள்ள மலை உச்சிக்கு செல்லும் பாதைகள், கோயில் அடிவாரம், மலையை சுற்றியுள்ள ரத வீதிகள், கிரிவலப் பாதைகளில் நேற்று காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவத்தினரை உள்ளூர் பொதுமக்கள், பக்தர்கள் மேளதாளத்துடன் மலர் தூவி வரவேற்றனர்.
பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவத்தினரை உள்ளூர் மக்கள், பக்தர்கள் மலர்தூவியும், மாலைகள் அணிவித்தும் உற்சாகத்துடன் வரவேற்றனர். அதேநேரம், மலையடிவாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகர காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையிலான போலீஸாருக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு பக்தர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது துணை ஆணையர் இனிகோ திவ்யன், “கோயில் ஊழியர்கள் தவிர மற்றவர்கள் மலை உச்சிக்கு செல்ல அனுமதி இல்லை. துணை ராணுவத்தினரிடம் போலீஸார் பாதுகாப்பு பணியை ஒப்படைத்து விடுவோம். அவர்களது முடிவின்படி பக்தர்கள் மலை உச்சிக்கு செல்லலாம்” என்றார்.