

ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. அங்கு போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்தார்.
பாளையங்கோட்டையில் தமமுக ஆலோசனைக் கூட்டம் ஜான்பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, பொது தொகுதியான ராஜபாளையத்தில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதில் ஏற்படும் சவால்கள், வேட்பாளர் தேர்வு மற்றும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
வேட்பாளர்களாக கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், பொதுச் செயலாளர் பிரிஸில்லா பாண்டியன் உள்ளிட்ட 3 பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை வாக்குச் சீட்டு முறையில் பதிவு செய்தனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜான்பாண்டியன் கூறியதாவது: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடைபெற்றது. நாளை (இன்று) காலை அதிகாரபூர்வமாக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். தாமரை சின்னத்தில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம். பொது தொகுதி வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி. கூட்டணி கட்சிகளில் அதிருப்தி இருப்பது இயல்பானது.
ஆனால், தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை பழனிசாமி தான். அதற்கு மாறாக செயல்படுபவர்கள் கட்சிக்கு விரோதமாக கருதப்படுவார்கள். சீட் கிடைக்காதவர்கள் சில கருத்துகளை தெரிவிப்பார்கள். இவ்வாறு தெரிவித்தார்.