வந்தே பாரத் ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.3.5 லட்சம் நகைகள் மீட்பு - எழும்பூர் ஆர்பிஎஃப் போலீஸாருக்கு பாராட்டு

வந்தே பாரத் ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.3.5 லட்சம் நகைகள் மீட்பு - எழும்பூர் ஆர்பிஎஃப் போலீஸாருக்கு பாராட்டு
Updated on
1 min read

சென்னை: நாகர்கோவில் - சென்னை எழும்பூருக்கு வந்த வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணி தவறவிட்ட, ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள தங்கத் தாலி செயின் மற்றும் வெள்ளி நகைகள் அடங்கிய பையை எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎஃப்) துரிதமாகச் செயல்பட்டு மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, ஏச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ம.பாலமுருகன். இவர் ஜூலை 31-ம் தேதி திருநெல்வேலியிலிருந்து விழுப்புரம் வரை வந்தே பாரத் ரயிலில் சி-12 பெட்டியில் பயணித்தார். விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கும்போது, தனது பையை ரயிலிலேயே தவறுதலாக விட்டுவிட்டு இறங்கிவிட்டார்.

அந்தப் பையில் 24 கிராம் தங்கத் தாலி செயின், 250 மில்லி கிராம் தங்க நாணயம், 4 வெள்ளி மெட்டிகள் மற்றும் உடைகள் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.50 லட்சம் ஆகும்.

இது குறித்து பாலமுருகனின் சகோதரர் ராஜ்குமார் சனிக்கிழமை (ஆக.1) அதிகாலை 4:29 மணிக்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு ஆன்லைன் மூலம் அவசரப் புகார் அளித்தார்.

இதன்பேரில், எழும்பூர் ஆர்.பி.எஃப் பெண் உதவி ஆய்வாளர் பி.கோமதி மற்றும் பெண் காவலர் சியாமளா மோல் ஆகியோர் துரிதமாக செயல்பட்டனர்.

அதிகாலை 5:00 மணிக்கு எழும்பூரிலிருந்து மீண்டும் புறப்படத் தயாராக இருந்த அதே ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ரயிலின் பேண்ட்ரி மேலாளர் பிரவீன் குமார், அந்தப் பையைத் தான் பத்திரமாக எடுத்து வைத்திருப்பதாகக் கூறி ஆர்.பி.எஃப் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

இதற்கிடையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த பயணி பாலமுருகனிடம், துணை ரயில் நிலைய மேலாளர் (வணிகம்) முன்னிலையில் நகைகள் அனைத்தும் அப்படியே சரிபார்க்கப்பட்டு, பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன.

நகைகளை விரைந்து மீட்டுக் கொடுத்த எழும்பூர் ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு பயணியின் குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்தனர். இதுபோல, ஆர்பிஎஃப் போலீஸாரை காவல் ஆய்வாளர் சுனில்குமார் வெகுவாக பாராட்டினார்.

வந்தே பாரத் ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.3.5 லட்சம் நகைகள் மீட்பு - எழும்பூர் ஆர்பிஎஃப் போலீஸாருக்கு பாராட்டு
OnePlus N6x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in