விஜய்க்காக காத்திருக்கிறாரா பழனிசாமி?

விஜய்க்காக காத்திருக்கிறாரா பழனிசாமி?

Published on

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திலும், தேர்தல் வாக்குறுதி அளிப்பதிலும் முந்திக்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு விஷயத்தில் அமைதி காத்து வருகிறார். கூட்டணிக்கு விஜய் வருகைக்காக அவர் காத்திருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆளுங்கட்சிக்கு சவால் விடும் வகையில் கடந்த ஜூலை மாதமே தொகுதி வாரியாக தனது பிரச்சாரத்தை முதல் நபராக பழனிசாமி தொடங்கிவிட்டார். இன்றுவரை சுமார் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துள்ளார். முதல் கட்சியாக 3 கட்டமாக மொத்தம் 16 தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்துள்ளார். இவரின் உத்தியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தால், இப்போது முதல்வர் ஸ்டாலினும் மேடை தோறும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க வேண்டியுள்ளது.

இப்படி பிரச்சாரம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதில் முதல்வனாக இருந்த பழனிசாமி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள நிலையில், தொகுதி பங்கீட்டில் அமைதி காத்து வருகிறார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தும் பழனிசாமி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. தவெக தலைவர் விஜய் தே.ஜ. கூட்டணிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: விஜய்க்காகவெல்லாம் அதிமுக தனது தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்காது. தேர்தல் அறிவிப்புக்காக பழனிசாமி காத்திருக்கிறார். தேர்தல் அறிவிப்பு வந்ததும் தொகுதி பங்கீட்டு விவரங்களை வெளியிடுவார். விஜய்யை கூட்டணிக்கு அழைக்கும் முயற்சியை பாஜக வேண்டுமானால் செய்யலாம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 30 தொகுதிகளையும், பாமக 22, அமமுக 10, தமாகா 6 தொகுதிகளையும் ஏற்கெனவே கேட்டுள்ளன. அதிமுக 165-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து பழனிசாமி ஒரு கணக்கை போட்டு வைத்துள்ளார்.

அதிமுகவை பொருத்தவரை, போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை என அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், பழனிசாமி முறைப்படி அறிவிப்பார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விஜய்க்காக காத்திருக்கிறாரா பழனிசாமி?
“கரூர் விவகாரத்தில் சிபிஐ சம்மனால் செந்தில் பாலாஜி பதறுகிறார்” - அண்ணாமலை விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in