பாஜகவின் ‘பிஹார் மாடல்’ அரசியல் தாக்கம் - ‘அலர்ட்’ ஆகிறாரா பழனிசாமி?

எடப்பாடி பழனிசாமி (இடது) | நிதிஷ் - அமித்ஷா (வலது)

எடப்பாடி பழனிசாமி (இடது) | நிதிஷ் - அமித்ஷா (வலது)

Updated on
5 min read

‘பாஜகவின் பிஹார் மாடல் அரசியல் தாக்கத்தால் அலர்ட் ஆகிறாரா பழனிசாமி?’ என்ற கேள்விக்கு விடை தேடும் முன்பு நிதிஷ் குமார் அண்மையில் மாநிலங்களவை தேர்தல் போட்டிக்காக முதல்வர் பதவியை துறப்பதாக அறிவித்தபோது பிஹாரின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கொடுத்த எதிர்வினையை தெரிந்துகொள்வது அவசியம்.

என்ன சொன்னார் தேஜஸ்வி?

“கடந்த 2005 முதல் 20 வருடங்​களாக 10 முறை பிஹார் முதல்வ​ராக தொடர்​பவர் நிதிஷ் கு​மார். இந்நிலையில், முதல்வர் பதவியை துறப்பது என்ற நிதிஷ் குமாரின் முடிவு மக்கள் தீர்ப்புக்கு செய்யும் துரோகம்.

பாஜக எப்பவுமே தலித்துகள், ஓபிசிக்களுக்கு எதிராக செயல்படும் கட்சி. அப்படியிருக்க, முதல்வர் பதவியை நிதிஷ் குமார் துறப்பது, சோஷலிஸ களமான பிஹாரில் பாஜக அதன் சித்தந்தத்தை செயல்படுத்த அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் செயல்.

மகாராஷ்டிராவில் என்ன செய்ததோ அதை பாஜக இனி பிஹாரில் செய்ய முயற்சிக்கிறது. மாநிலங்களில் தங்கள் தலைமையின் சொற்படி நடக்கும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வர்தான் அங்கு கூட்டணி ஆட்சியை அமைக்கும் பாஜகவுக்கு தேவை” என்றார் தேஜஸ்வி.

தேஜஸ்வி மட்டுமல்ல பிராந்திய அரசியல் கட்சிகள் பலவும், பாஜக இந்தியாவை ஒற்றைக் கட்சி நாடாக மாற்ற முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை பல காலமாகவே முன்வைத்து வருகின்றன. அந்தக் குற்றச்சாட்டில் கடைசியாக சிக்கியுள்ளதுதான் பிஹார் எனலாம்.

மகாராஷ்டிராவின் அடையாளமாக இருந்த சிவ சேனா இரண்டாக உடைக்கப்பட்டு, ஏக்நாத் ஷிண்டே மூலம் ஆட்சியைப் பிடித்த பாஜக இப்போது ஷிண்டேவை ஓரங்கட்டிவிட்டு அங்கு பட்நாவிஸை முதல்வராக்கிவிட்டது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.

இதேபோன்றதொரு சூழல் பிஹாரிலும் உருவாகியுள்ளது என்பதுதான் அம்மாநிலக் கட்சித் தலைவர்கள் முதல் அரசியல் நிபுணர்கள் வரையிலான பார்வையாக உள்ளது.

உடல்நிலை காரணமா?

நிதிஷ் குமாரின் முடிவுக்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. வயது ​மூப்​பால் நிதிஷ் உடல்​நிலை​யில் ஏற்​பட்ட பாதிப்பு அவரது இந்த முடிவுக்கு முக்​கிய காரணமாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

“உடல்நிலை ஒத்துழைக்காததால் முதல்வர் பதவியை துறக்க தயாராக இருந்த நிதிஷுக்கு, கவுர​மாக பதவி விலக மாநிலங்​களவை தேர்​தல் சாதக​மாகி விட்​டது என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும், மக்கள் தீர்ப்புக்கு துரோகம் செய்துவிட்டார் நிதிஷ் போன்ற ஏச்சுக்களை சமாளிக்க தனது மகன் நிஷாந்த் குமாரை துணை முதல்வராக்கும் காய்களையும் அவர் நகர்த்திவிட்டார்” என்றும் கூறப்படுகிறது.

பிஹார் அரசியலில் ஆர்ஜேடி, ஜேடியு போன்ற கட்சிகள் தான் மக்கள் மத்தியில் பிரதான அபிமானம் கொண்டவை. நிதிஷ் குமார் முதல்வர் பதவிக்காக செய்துகொண்ட கூட்டணி சமரசம முடிவுகளால் மட்டுமேதான் பாஜக பிஹாரில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தது.

அதன் நீட்சியாக இந்தத் தேர்தலில் இரட்டை இன்ஜின் அரசு என்ற பிரச்சாரத்தோடு இறங்கி மகளிருக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளித்து, தனது இருப்பை இன்னும் அதிகமாக பலப்படுத்தியுள்ளது பாஜக.

பிஹாரில் காங்கிரஸ் அதன் பிடியை கிட்டத்தட்ட முழுமையாக இழந்துவிட்டது என்றே சொல்லும் அளவுக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இருந்தன. தேஜஸ்வி யாதவும் ஆர்ஜேடி-க்கு கம்பேக் கொடுக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்க, ஓபிசி, பட்டியலின வாக்கு வங்கியை நிதிஷ் பாஜகவுக்கு தாரைவார்த்துக் கொடுத்திருப்பதாகவே அவரது ராஜினாமா முடிவு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

கடந்த பிஹார் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் முன்னிருத்தப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் சரிநிகர் எண்ணிக்கையில் ஜேடியு மற்றும் பாஜக போட்டியிட்டன. இதில், நிதிஷ் கட்சியை விட 4 தொகுதிகள் கூடுதலாக, அதாவது 89 இடங்களில் வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.

பாஜகவின் ‘மாநில அரசியல் ஆக்கிரமிப்பு’ மாடலுக்கு நிதிஷ் தன்னை இழந்துவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்தப் போக்கை முன்வைத்து, அன்று மஹாராஷ்டிராவில் நடந்தது, இப்போது பிஹாரில் நடப்பது, இனி தமிழகத்திலும் நடக்கலாம், இது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கான எச்சரிக்கை என்றும், ‘பிஹார் நிலைமை, வேறு தமிழக களம் வேறு’ என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன.

அதிமுக - பாஜக உறவைப் பற்றி அரசியல் விமர்சகர் ஒருவர் கூறும்போது, “தாமரையை தமிழகத்தில் மலர வைப்பது அடுத்தக்கட்டம். அதை தமிழக மக்களின் மனங்களில் நிலைநிறுத்துவது தான் பாஜகவின் முதல் முயற்சி. திராவிட பூமி என்ற கருத்தியலில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நீண்ட கால திட்டம்.

2016-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் 70+ நாட்கள் இருந்தபோதே தாமரையை தமிழகத்தில் நிலை நிறுத்துவதற்கான நகர்வை பாஜக எடுத்துவைத்துவிட்டது.

அவர் மறைவுக்குப் பின்னர், அதுவரை எல்லா முடிவுகளும் மேலிருந்து வரும் என்று காத்திருந்த ஒரு கூட்டம் மட்டுமே பாஜகவின் கண் முன் இருந்தது. அதை ஆட்டுவிக்க முடிவு செய்தது பாஜக. அதற்குத் தோதாக தர்மயுத்தம் தொடங்கி, கூவத்தூர் பேரம் வரை பல காட்சிகள் அதிமுகவுக்குள் அரங்கேறின. அணி அணியாக ஆளுநரை சந்தித்துத் திரும்பும் காட்சிகள் தமிழக அரசியல் களம் அதுவரை கண்டிராதது.

அப்படியான சூழலில் அடுத்துவந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியை சாத்தியப்படுத்திய பாஜக 4 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்கு சம்பாதித்தது. இருப்பினும் அதிமுக ஆட்சியை இழந்தது. பாஜக கூட்டணிதான் பின்னடைவுக்குக் காரணம் என்று பேசப்பட்டது. தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, அதிமுகவுடன் தொடர்ந்து உரசலை கடைப்பிடித்தது, கூட்டணியில் இருந்து அதிமுகவை வெளியேறச் செய்தது.

இந்தச் சூழலில் அதிமுகவுக்கே உரிமை கோரி இருதரப்பு போராட, அதை சமாளிக்க பாஜகவின் துணை தேவைப்படத்தான் செய்தது. இப்படியான நிர்பந்தத்தில் தான் அதிமுக, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியியை அமைத்துக் கொண்டிருக்கிறது. கட்சி, சின்னம் எதுவும் தன்னை விட்டுப் போகக் கூடாது என்ற இபிஎஸ் முயற்சிக்கான அறுவடை இது.

சென்னையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானதை டெல்லியில் இருந்துவந்த அமித் ஷா அறிவித்தார். ஒரு மாநிலக் கட்சியுடன் தேசியக் கட்சி வந்து கூட்டணி அமைக்க, அதை அறிவிக்காமல் மேடையில் இருந்த இபிஎஸ் சிரித்து போஸ் மட்டுமே கொடுத்தது ஏன் என்ற கேள்வி இன்றளவும் நீடிக்கிறது. அதேபோல், அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியும் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் என்றுதான் சொன்னாரே தவிர அதிமுக ஆட்சி என்று சொல்லவில்லை.

டெல்லி மேலிடம், எம்ஜிஆர், ஜெயலலிதாவை பிரச்சாரக் களத்தில் கைவிடத் தயாராக இல்லை, அதேவேளையில் அதிமுகவை தூக்கிப் பிடிக்கவும் விரும்பவில்லை என்று தனது அணுகுமுறையில் தெளிவாகக் காட்டுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக - பாஜக உள்ள என்டிஏ ஆட்சி அமைந்தால், அதன் பின்னர் தான் ஆட்டம் சூடுபிடிக்கும். மகாராஷ்டிராவில் நடந்ததுபோலவும் நடக்கலாம், பிஹாரைப் போலவும் நடக்கலாம். பாஜகவின் மாநிலக் கட்சி கபளீகர உத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை” என்றார் அந்த அரசியல் விமர்சகர்.

இன்னொரு தரப்பு வாதமும் இங்கே முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

‘அதிமுக என்பது அரசியலுக்கோ, ஆட்சிக்கோ புதிது அல்ல. ஒற்றைத் தலைமை என்பதுதான் அதிமுகவின் பாரம்பரிய அடையாளம். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் கட்சியை ஒருவரே ஒருங்கிணைத்து முன்னே செலுத்த வேண்டும் என்ற முயற்சியில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அதில் அவர் இதுவரை வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஓபிஎஸ், சசிகலா விஷயத்தில் பழனிசாமியின் பிடிவாதம் அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்துள்ளது. அதிமுக முக்கியம், எடப்பாடி பழனிசாமி முக்கியம் என்பதை உணர்ந்ததால்தான் அண்ணாமலையை மாற்றிய பாஜக, ஓபிஎஸ்ஸை புறக்கணித்தது. பழனிசாமி இருக்கும் அணியில் இருப்பதற்கு தூக்கில் தொங்கலாம் என்ற டிடிவி தினகரனையும் சமரசம் செய்து என்டிஏ-வுக்குள் மீண்டும் இழுத்து வைத்தது.

அதிமுக அன்றும், இன்றும் இரும்புக் கோட்டைதான். அதிமுகவை இதற்கு முன்னர் யாரும் அசைத்துப் பார்க்க முயற்சித்ததில்லை. இப்போது அசைத்துப் பார்க்க நினைத்தாலும் அது முதலுக்கே மோசமாகும். அதிமுகவை கபளீகரம் செய்தோ அதன் அடையாளத்தை அழித்தோ தமிழகத்தில் வலுவாகவே முடியாது என்று தெரியும். கள யதார்த்தம் புரிந்துதான் பாஜக கூட்டணியை அமைத்துள்ளது.

மகாராஷ்டிரா, பிஹாரின் அரசியல், கலாச்சார களம் வேறு. அங்குள்ள பிரச்சினைகளும் வேறு. பிஹாரில் தலித், ஓபிசி வாக்கு வங்கி சார்ந்து ஆட்சிகள் அமைகின்றன. அதையும் தாண்டி தான் முதல்வராக இருக்க வேண்டும் என்பதற்காக நிதிஷ் குமார் செல்லாத கூட்டணி இருக்காது.

நிதிஷ் குமார் இண்டியா கூட்டணியையும் உருவாக்குவார், பின்னர் அதை நட்டாற்றில் விட்டுவிட்டு பாஜகவில் வந்து சேர்ந்து கொள்வார். ‘இந்திய அரசியலிலேயே நம்பகத்தன்மையற்ற அரசியல்வாதி என்றால் அது நிதிஷ்குமார்’ என்றெல்லாம் ஊடக விமர்சனங்களில் அழைக்கப்பட்டவர்.

அதேபோல், மகாராஷ்டிராவில் மாநிலக் கட்சியை பாஜக கபளீகரம் செய்தது என்றெல்லாம் சொல்ல முடியாது. அங்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் பலம் பொருந்தியதாக இருந்திருக்கின்றன.

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. அதுவும்கூட அங்குள்ள மக்களுக்கு ஆட்சி மாற்றத்தின் தேவையை ஏற்படுத்தியதாக இருக்கலாம். மேலும், மகாரஷ்டிராவின் சிவ சேனா கட்சி, மண்ணின் மைந்தர்கள் என்ற குறுகிய கான்செப்ட் அடிப்படையில் தான் எப்போதுமே அரசியல் செய்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் பாஜக வலுவாகக் காலூன்ற மாநில மக்கள் மத்தியில் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும், சிவ சேனாவும் நம்பிக்கையை இழந்ததுதான் காரணமே தவிர, பாஜகவின் சதியெல்லாம் இல்லை.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக அதன் மக்கள் அபிமானத்தை சற்றும் இழக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆதரவு, குறிப்பாக பெண்களின் வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் அதிமுக மட்டுமே 33.29% வாக்குகளைப் பெற்றது. திமுக தனித்து 37.07% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த வாக்கு வித்தியாசம் இமாலய வித்தியாசம் ஒன்றுமில்லை. அதிமுக தனித்து மக்கள் மத்தியில் எந்த அபிமானத்தையும் இழக்கவில்லை.

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏற்படுத்திக் கொடுத்தது அதிமுக தான். நீட் விவகாரத்தில் ஒரு சிறிய கல்லைக் கூட திமுக அசைக்கவில்லை.

இந்த ஐந்த ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியின் லட்சணத்தை பார்த்துவிட்ட மக்கள், இந்தத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பார்கள். அதுவும் அதிமுக தலைமையில் தான் இங்கு கூட்டணி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 3 கட்ட தேர்தல் அறிக்கைகளை இபிஎஸ் அறிவித்துவிட்டார். அதுவும் தமிழக நலன் மீதான தொலைநோக்குப் பார்வை கொண்டவையாக அவை உள்ளன. அதிமுக கட்டமைப்பையோ, தமிழக நலனையோ இதுவரை எங்கும் சமரசம் செய்யாதவர்தான் இபிஎஸ்’ என்று அவர் தரப்பின் அழுத்தமாகக் கூறுகின்றனர்.

அதேவேளையில், ‘பிஹார் அரசியல் அதிகார மாற்றம்’ நிகழ்வுக்குப் பின் அதிமுக முகாமில் வேறு விதமான ‘அலர்ட்’ அணுகுமுறைகள் தென்படுகின்றன.

பாஜகவுக்கு தொகுதிப் பங்கீட்டில், அவர்கள் கேட்பதைவிட குறைந்த தொகுதிகளை ஒதுக்குவது, வெற்றி வாய்ப்பு தொகுதிகளை தக்கவைத்துக் கொள்வதில் தெளிவாகக் காய் நகர்த்துவது முதலான உத்திகளைக் கையாண்டு, தேர்தலுக்குப் பின் அதிமுக ‘நம்பர்’களில் சேதாரம் ஆகாமல் பார்த்துக்கொள்வது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து இபிஎஸ் பிரம்மாண்ட வியூகம் வகுத்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ‘பாஜக கூட்டணியில் இருந்து ஆளும் மாநிலங்களையும் தமிழக மக்கள் கவனித்து வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி இந்தத் தேர்தலில் எடுபடும் கூட்டணிதான்’ என்கின்றனர். இவ்வாறாக பாஜகவின் அனைத்து உத்திகளிலும் இபிஎஸ் ‘அலர்ட்’டாகவே இருக்கிறாராம்!

<div class="paragraphs"><p>எடப்பாடி பழனிசாமி (இடது) | நிதிஷ் - அமித்ஷா (வலது)</p></div>
Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in