

சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, போக்குவரத்து மற்றும் சாலை அமைப்புகளின் தரவுகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. வாகனங்கள் அதிகளவில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றாலும், நகரில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு பணிகள் காரணமாகவும் நெரிசல் அதிகரிக்கிறது.
இந்த பிரச்சினைக்கு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகரச் சாலைகளில் நிலவும் குழப்பங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில், நகரத்தின் போக்குவரத்து, சாலை அமைப்புகள் குறித்ததரவுகளை ஒருங்கிணைக்க, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ரூ.146.7 கோடி செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய துறைகளான மெட்ரோ ரயில், மாநகர போக்குவரத்துக் கழகம், குடிநீர் வாரியம், காவல் துறை மற்றும் மின்வாரியம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் தரவுகளை இணைத்து, ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டு வர, தனியார் ஆலோசனை நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்துள்ளது.
முதலில் நகரின் பழைய மற்றும் மையப் பகுதிகளில் தொடங்கப்பட்டு, பின்னர், சென்னை மாநகர் முழுவதும் இது விரிவுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் கூறியதாவது: இந்த திட்டத்தை உருவாக்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட 31 துறைகளுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. மேலும், இதே போன்றதொரு அமைப்பை ஆய்வு செய்வதற்காக எங்கள் அதிகாரிகள் சிங்கப்பூர் சென்று ஆய்வு செய்தனர்.
வரைபடங்கள், சாலை விவரங்கள், குடிநீர் மற்றும் மின் இணைப்புகள் அமைந்துள்ள இடங்கள், பொதுப் போக்குவரத்து வழிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 6 கூறுகளைக் கொண்ட தரவு தளமாக இது செயல்படும்.
இதனுடன் துறைகள் இணைந்து உள்கட்டமைப்புத் திட்டங்களைத் திட்டமிடவும், கண்காணிக்கவும் உதவும் ஒருங்கிணைப்புக் கருவியும் இடம்பெறும். இதனால், துறைகளுக்கிடையேயான முரண்பாடுகளைத் தானாகவே கண்டறிவது மற்றும் போக்குவரத்து காவல் துறையின் ஒப்புதல்களை ஒரே அமைப்பின் மூலம் பெறுவது போன்ற பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்க இந்த அமைப்பு உதவும்.
மேலும், இந்த புதிய தளம் ஏற்கெனவே உள்ள துறைசார் அமைப்புகளுக்குப் பதிலாகவோ அல்லது அதன் நகலாகவோ செயல்படாது. மாறாக, தற்போதுள்ள தரவுகளுடன் இணைக்கப்படும் வகையிலேயே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கையின் இறுதி வரைவு அடுத்த வாரம் ஆய்வுக் குழுவில் விவாதிக்கப்பட்டு, அதன் பிறகு மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.