

சென்னை: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் உடல்கள் விமானம் மூலம் சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு, அரசு சார்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள், கடந்த 11-ம் தேதி கடலில் பயணம் செய்தபோது படகு கவிழ்ந்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர், கேரளாவைச் சேர்ந்த 2 பேர் என 15 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்களை, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை வியட்நாமில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டனர். அதேபோல், தமிழகத்தை சேர்ந்த 10 பேர்களின் உடல்களை விரைவாக, தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்த முதல்வர் விஜய், சேலம் டிஐஜி சந்தோஷ் ஹடிமானியை வியாட்நாம் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
வியட்நாம் நாட்டில் இருந்து 15 பேரின் உடல்கள் விமானம் மூலம் கடந்த 13-ம் தேதி மும்பை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, நேற்று அதிகாலை தமிழகம், ஆந்திரா, கேரளா மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் உடல்கள் விமானங்கள் மூலம் சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு கொண்டுவரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிசங்கர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விநயக்குமார் (36), சென்னை அகரத்தைச் சேர்ந்த சந்தோஷ், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டியைச் சேர்ந்த பாபு ஆகியோரின் உடல்கள் மும்பையில் இருந்து சென்னைக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.
சென்னை பழைய விமான நிலைய கார்கோ பகுதியில் சட்ட நடைமுறைகள் நிறைவு செய்த பிறகு, இறந்தவர்களின் உடல்களுக்கு தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்த அதிகாரிகள், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல், மேலும் 6 பேர்களின் உடல்களும் விமானம் மூலம் கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறந்தவர்களின் உறவினர்கள் கூறும்போது, “எங்களின் துயரமான நேரத்தில், மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்துள்ளன” என்றனர்.