

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி பிரிவு அமைக்கப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
தமிழக மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மருத்துவக் கல்லூரி முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார், நிலைய மருத்துவ அலுவலர் சரவணன், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மதுரைக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளோம். முதல்வர் புற்றுநோய் பாதுகாப்பு இயக்கம் சார்பில், மாநில அளவில் ஒரு சிறப்பு அமைப்பும், 5 இடங்களில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும். இதன்படி, மதுரையில் ரூ.84 கோடியில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைகிறது. அவ்விடத்தில் இருந்த சட்ட சிக்கல்களை தளர்த்தி உரிய அனுமதியை வாங்கியுள்ளோம். விரைவில் பூமி பூஜை நடத்தப்படும்.
மேலும், தீவிர சிகிச்சை பிரிவு ரூ.44 கோடியில் அண்ணா பேருந்து நிலைய பகுதியில் அமைக்கிறது. தமிழகத்தில் கடந்த 12 ஆண்டாக எவ்வித புதிய செவிலியர் கல்லூரியும் ஆரம்பிக்கவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் 7 கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலும் ஒரு கல்லூரி தொடங்கப்படுகிறது.
மதுரை அரசு மருத்துவமனைக்கு தேவை அடிப்படையில் ரூ.7.5 கோடியில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இருதய சிகிச்சை பிரிவுக்கென ரூ.4.5 கோடியில் புதிய உபகரணங்கள் வாங்கப்படும். மதுரை மாவட்டத்துக்கென மொத்தம் ரூ.806.9 கோடி அளவில் மருத்துவத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மக்களை முதல்வர் எந்தளவு நேசிக்கிறார். அவர்களின் மருத்துவ தேவை புரிந்துள்ளார் என்பது தெரிகிறது.
எந்த இடத்துக்கு ஆய்வு சென்றாலும், செவிலியர் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. இதற்காக மாவட்ட சுகாதார நலச் சங்கம் மூலம் 4,500 புதிய செவிலியர்கள் நியமிக்க முயற்சித்தபோது, இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், விரைவில் 4,500 செவிலியர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
22 ஏக்கர் கொண்ட மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் காலியிடமே இல்லை. மருத்துவர்கள் ஓய்வெடுக்கவே இடமில்லை. நீண்ட கால திட்டமிடல் இன்றியே கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மதுரை மட்டுமின்றி பிற அரசு மருத்துவமனை வளாகங்களிலும் இதே நிலை உள்ளது. எப்போது நிதி வருகிறதோ அப்போதெல்லாம் போதிய வசதி இன்றி கட்டிடங்களை கட்டியுள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் 1940-ல் கட்டிய வெளி நோயாளி பிரிவு போதிய வசதியின்றி உள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய பழைய வடிவிலான ஒருங்கிணைந்த வெளி நோயாளி பிரிவு உருவாக்கப்படும்.
முதல்வர் லண்டன் சென்றுள்ளதால் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தள்ளிப்போகிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
எய்ம்ஸ் மருத்துவ கட்டுமான பணி குறித்து ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளோம். நானும் அங்கு ஆய்வு செய்ய உள்ளேன்.
தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கையின் அடிப்படையில் முதல் கட்டமாக 2,500 பேர் நிரந்தரம் செய்துள்ளோம். பிற துறைகளிலும் தற்காலிக ஊழியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படும்.
மருத்துவர்கள், ஊழியர்கள் பணி நேரத்தில் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளோம். இதற்காக வருகை பதிவேடு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்.
இடநெருக்கடி போக்க, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் மாஸ்டர் பிளான் உருவாக்கி அதற்கான நீண்ட கால கட்டுமானம் மேற்கொள்ளப்படும்.
மருத்துவத் துறையில் 24 வகையான பணியிடங்களில் 3,500 பணியிடங்களை உருவாக்கி, காலியிடங்கள் கண்டறிந்து நிரப்பப்படும். மருத்துவக் கழிவுகளை சாலை யோரத்தில் திறந்த வெளியில் கொட்டுவது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
இதைத் தொடர்ந்து மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமையும் இடத்தில் அமைச்சர் பார்வையிட்டார்.