

சென்னை: சைதாப்பேட்டை கிளை சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக, அங்கு அடைக்கப்பட்டிருந்த 23 கைதிகள் கடந்த வாரம் சைதாப்பேட்டை கிளை சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு போதிய இடவசதி இல்லை எனக் கூறிய அவர்கள், தங்களை மீண்டும் புழல் மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த புழல் சிறையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள், நேற்று முன்தினம் காலை சைதாப்பேட்டை கிளை சிறையின் சமையல் அறையில் உணவு தயாரித்துக் கொண்டிருந்த 4 கைதிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டதில் 4 கைதிகள் காயமடைந்தனர். இதைக் கண்ட சிறைக் காவலர்கள் விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். மேலும், காயமடைந்த 4 கைதிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து, சிறைத்துறை டிஐஜி பழனி சைதாப்பேட்டை கிளை சிறைக்குச் சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். பின்னர், புழல் மத்திய சிறையிலிருந்து மாற்றப்பட்ட 23 கைதிகள் மற்றும் மோதலில் காயமடைந்த 4 கைதிகள் என மொத்தம் 27 பேரையும் மீண்டும் புழல் மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவிட்டார்.
இதன்படி, சிறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில், 27 கைதிகளையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் மாலை புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர். இதற்கிடையே, இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கைதிகள் ஜோசுவா, சஞ்சய் என்ற ஜாங்கோ, குமார், விக்னேஷ், சூர்யா, அருண், சதீஷ், தினேஷ்குமார், வெள்ள சரத், வசந்தகுமார் உள்ளிட்டோரிடம் சிறைத்துறை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.