

தவாக தலைவர் தி.வேல்முருகன்
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, 2017 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இவ்விவகாரம் தொடர்பாக 8 வட்டாட்சியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. மாணவர்களின் கல்வி, உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டிய நிர்வாக அமைப்புகளின் செயல்பாடே தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.